10 ஆண்டுகளாக தரப்படும் நெருக்கடி : அதிரடி தீர்வு காண விஜய் முடிவு?

தினமலர்  தினமலர்
10 ஆண்டுகளாக தரப்படும் நெருக்கடி : அதிரடி தீர்வு காண விஜய் முடிவு?

கடந்த 10 ஆண்டுகளாக நடிகர் விஜய் படங்கள் வெளியீட்டின்போது சிக்கல்கள் ஏற்படுவதால் அதற்கெல்லாம் ஒரே தீர்வு அரசியல் பிரவேசம் தான் என அவர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

நடிகர் விஜய் நடிக்கும் படங்களுக்கு 2011 முதல் சிக்கல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. சுறா படத்தின் தோல்வியால், காவலன் படத்திற்கு சிக்கல் உருவாக, நஷ்டஈடு கொடுத்த பின், காவலன் படம் வெளியானது. கடந்த 2012ல் துப்பாக்கி படத்தின் தலைப்புக்கு சிக்கல் ஏற்பட, வழக்கை தாண்டி படம் வெளியானது. கடந்த 2013ல் தலைவா படத் தலைப்பில், 'டைம் டு லீட்' என்ற இணைத் தலைப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்ப, தியேட்டருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதன் காரணமாக, சில நாள் கழித்து, இணைத் தலைப்பை நீக்கிய பின், தலைவா படம் வெளியானது.கடந்த 2014ல் ராஜபக்சேவுக்கு நெருக்கமான 'லைக்கா' நிறுவனம் தயாரித்த, கத்தி படத்திற்கும் எதிர்ப்பு கிளம்பியது. 2015ல் புலி படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமான வரித் துறை 'ரெய்டு' காரணமாக, அதிகாலை காட்சிகள் ரத்தாகின.



கடந்த 2016ல் தெறி படத்தின் வெளியீட்டின் போது, வினியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டது. கடந்த 2017ல் மெர்சல் படத்தில் விஜய் பேசிய, ஜி.எஸ்.டி., வரி சம்பந்தப்பட்ட காட்சிகளால், பட வெளியீட்டுக்கு முந்தைய நாள் வரை, 'சென்சார்' சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

கடந்த 2018ல், சர்கார் படத்தின் கதை திருடப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து, வருண் ராஜேந்திரன் என்பவர் புகார் கொடுத்திருந்தார். கடந்த 2019ல் பிகில் படத்தின் போஸ்டரில், இறைச்சி வெட்டும் மரக்கட்டையின் மீது விஜய் கால் வைத்திருப்பது போன்ற 'போஸ்டர்' வெளியானது. இதனால், வியாபாரிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். மேலும் 2021ல் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்த போது, வருமான வரித் துறையினர், விஜய் வீட்டில் ரெய்டு நடத்தினர்.

கடந்த 2022 ஏப்., 14ல், பீஸ்ட் படம் வெளியாக இருந்த நிலையில், கே.ஜி.எப்., படம் காரணமாக, ஒரு நாள் முன்னதாக பீஸ்ட் வெளியானது. தற்போது, 2023ல் வெளியாக உள்ள வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியீட்டுக்கு, ஆந்திராவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல், படப்பிடிப்பில் யானையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக புகாரும் கிளம்பி உள்ளது.

ஒட்டுமொத்தமாக, ஒவ்வொரு ஆண்டும் தன் பட வெளியீட்டின்போது பிரச்னையை சந்திக்கும் விஜய், இதை நிரந்தரமாக தீர்க்க, அரசியலை கையில் எடுத்துள்ளார். சத்தமில்லாமல் தன் ரசிகர் மன்றம் வாயிலாக களமிறங்க காத்திருக்கிறார். ஏற்கனவே தனது மக்கள் இயக்கத்தினர் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட்டு 100க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றனர். இதை அடுத்தடுத்த தளத்திற்கு கொண்டு செல்ல விஜய் முடிவெடுத்துள்ளார். அதன்வெளிப்பாடாகவே சமீபத்தில் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் சந்தித்து பேசியதாக தெரிகிறது.

- நமது நிருபர் -

மூலக்கதை