டெல்லி அரசுப் பள்ளிகளில் வகுப்பறை கட்டியதில் ரூ.1,300 கோடி ஊழல்?...விஜிலென்ஸ் இயக்குநரகம் அறிக்கை சமர்பிப்பு

தினகரன்  தினகரன்
டெல்லி அரசுப் பள்ளிகளில் வகுப்பறை கட்டியதில் ரூ.1,300 கோடி ஊழல்?...விஜிலென்ஸ் இயக்குநரகம் அறிக்கை சமர்பிப்பு

புதுடெல்லி: டெல்லி அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டியதில் ரூ. 1,300 கோடி ஊழல் நடந்துள்ளதாகவும், சிறப்பு ஏஜென்சி மூலம் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று, தலைமை செயலாளரிடம் விஜிலென்ஸ் இயக்குநரகம் அறிக்கை சமர்பித்துள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு, கடந்த 2015ல்  193 பள்ளிகளில் 2,405 ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்டும் பணியை  பொதுப்பணித்துறையிடம் ஒப்படைத்தது. மேற்கண்ட 2,405 வகுப்பறைகளைக் கட்டியதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்ததால், சிறப்பு ஏஜென்சி மூலம் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று டெல்லி அரசின் விஜிலென்ஸ் இயக்குநரகம் (டிஓவி), தலைமைச் செயலரிடம் அறிக்கை சமர்பித்துள்ளது. இதுகுறித்து  விஜிலென்ஸ் இயக்குநரக வட்டாரங்கள் கூறுகையில், ‘மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் டெல்லி அரசால் கட்டப்பட்ட பள்ளிகளில் 1,300 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் கடந்த 2020ம் ஆண்டு தனது கருத்துகளை தெரிவிக்குமாறு மத்திய கண்காணிப்பு ஆணையம்,  விஜிலென்ஸ் இயக்குநரகத்திற்கு அறிக்கை அனுப்பியது. ஆனால் முதல்வர் அலுவலகம் உரிய பதிலை அளிக்கவில்லை. டெண்டர் நடைமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை; விதிகள் மீறப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. எனவே தற்போது டெல்லி அரசின் விஜிலென்ஸ் இயக்குநரகம், தலைமைச் செயலரிடம் அறிக்கை சமர்பித்துள்ளது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மூலக்கதை