பைனலில் பூணம் யாதவ் அணி: ‘டி–20’ சேலஞ்சர் தொடரில் | நவம்பர் 24, 2022

தினமலர்  தினமலர்
பைனலில் பூணம் யாதவ் அணி: ‘டி–20’ சேலஞ்சர் தொடரில் | நவம்பர் 24, 2022

ராய்பூர்: ‘டி–20’ சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் பைனலுக்கு பூணம் யாதவ், ஸ்னே ராணா அணிகள் முன்னேறின.

சட்டீஸ்கர் மாநிலம் ராய்பூரில், பெண்களுக்கான ‘டி–20’ சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இந்தியா ‘ஏ’, ‘பி’, ‘சி’, ‘டி’ என, 4 அணிகள் ‘ரவுண்டு ராபின்’ முறையில் லீக் சுற்றில் மோதின. கடைசி லீக் போட்டியில் பூணம் யாதவ் தலைமையிலான இந்தியா ‘ஏ’ அணி, ஸ்னே ராணா வழிநடத்தும் இந்தியா ‘டி’ அணியை எதிர்கொண்டது. ‘டாஸ்’ வென்ற இந்தியா ‘ஏ’ அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

 

இந்தியா ‘டி’ அணிக்கு அஷ்வனி குமாரி (31), ஸ்னே ராணா (23*) கைகொடுக்க 19.4 ஓவரில் 92 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. சுலப இலக்கை விரட்டிய இந்தியா ‘ஏ’ அணிக்கு நுஜாத் பர்வீன் (24), ஷிவாலி ஷிண்டே (27) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முஸ்கான் மாலிக் (20*), அமன்ஜோத் கவுர் (17*) கைகொடுக்க 18.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 95 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

லீக் சுற்றின் முடிவில் இந்தியா ‘டி’ (1.678 ‘ரன் ரேட்’), இந்தியா ‘ஏ’ (0.146), இந்தியா ‘பி’ (–0.372) அணிகள் தலா 8 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருந்தன. ‘ரன் ரேட்’ அடிப்படையில் முதலிரண்டு இடங்களை உறுதி செய்த இந்தியா ‘டி’, இந்தியா ‘ஏ’ அணிகள் பைனலுக்கு (நவ. 26) முன்னேறின.

மூலக்கதை