வெற்றியுடன் துவக்குமா இந்தியா: நியூசிலாந்துடன் முதல் மோதல் | நவம்பர் 24, 2022

தினமலர்  தினமலர்
வெற்றியுடன் துவக்குமா இந்தியா: நியூசிலாந்துடன் முதல் மோதல் | நவம்பர் 24, 2022

ஆக்லாந்து: இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இதில் இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வெற்றியுடன் துவக்க காத்திருக்கிறது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள் ஹாமில்டன் (நவ. 27), கிறைஸ்ட்சர்ச்சில் (நவ. 30) நடக்கவுள்ளன.

 

சீனியர்கள் ஓய்வு: இத்தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களான ‘ரெகுலர்’ கேப்டன் ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, லோகேஷ் ராகுல், பும்ரா, ரவிந்திர ஜடேஜாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. இதேபோல தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு பதிலாக லட்சுமண் பயிற்சியின் கீழ் பங்கேற்கிறது.

 

சூர்யகுமார் பலம்: அடுத்த ஆண்டு இந்தியாவில் ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) தொடர் நடக்க இருப்பதால், நியூசிலாந்து தொடர் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்திய அணிக்கு கேப்டன் தவான், சுப்மன் கில் ஜோடி துவக்கம் தர காத்திருக்கிறது. ‘டி–20’ தொடரில் அசத்திய சூர்யகுமார் யாதவ், 3வது இடத்தில் பலம் சேர்க்கலாம். ‘மிடில் ஆர்டரில்’ ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பன்ட், சஞ்சு சாம்சன் கைகொடுத்தால் நல்ல ஸ்கோரை பெறலாம்.

 

தீபக் ஹூடா, ஷாபாஸ் அகமது ‘ஆல்–ரவுண்டராக’ அசத்தினால் நல்லது. 2020ல் மோசமான பந்துவீச்சு காரணமாக கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 0–3 என தொடரை இழந்தது. எனவே இம்முறை பவுலிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வேகப்பந்துவீச்சில் தீபக் சகார், அர்ஷ்தீப் சிங், ஷர்துல் தாகூர், உம்ரான் மாலிக் மிரட்ட காத்திருக்கின்றனர். ‘சுழலில்’ யுவேந்திர சகால், குல்தீப் யாதவ் கூட்டணி விக்கெட் வேட்டை நடத்தலாம்.

 

வில்லியம்சன் நம்பிக்கை: சொந்த மண்ணில் விளையாடும் நியூசிலாந்து அணிக்கு கேப்டன் கேன் வில்லியம்சன், கான்வே, லதாம், பிரேஸ்வெல், பிலிப்ஸ் பேட்டிங்கில் கைகொடுக்கலாம். ‘வேகத்தில்’ சவுத்தீ, மாட் ஹென்ரி, ஆடம் மில்னே, ஜேம்ஸ் நீஷம் சாதிக்கலாம். ‘சுழலில்’ மிட்சல் சான்ட்னர் கைகொடுத்தால் நல்லது.

 

ஒருநாள் போட்டி அரங்கில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் 110 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 55, நியூசிலாந்து 49ல் வெற்றி பெற்றன. ஒரு போட்டி ‘டை’ ஆனது. ஐந்து போட்டிகளுக்கு முடிவு இல்லை.

 

10வது முறை

ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி 10வது முறையாக நியூசிலாந்து சென்றுள்ளது. இதில் 2 முறை (2008–09, 2018–19) கோப்பை வென்ற இந்தியா, 5 முறை (1975–76, 1980–81, 2002–03, 2013–14, 2019–20) தொடரை இழந்தது. இரண்டு தொடர் (1993–94, 1998–99) சமன் ஆனது.

 

மழை வருமா

முதல் ஒருநாள் போட்டி நடக்கவுள்ள ஆக்லாந்தில் வெப்பநிலை, பகல் நேரத்தில் 19, இரவில் 14 டிகிரி செல்சியசாக இருக்கும். எனவே இங்கு மழை வர வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை