'நம்ம ஊரு சூப்பரு': பிளக்ஸ் பேனருக்கு தாறுமாறு வசூல்

தினமலர்  தினமலர்
நம்ம ஊரு சூப்பரு: பிளக்ஸ் பேனருக்கு தாறுமாறு வசூல்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில், 'நம்ம ஊரு சூப்பரு' பிளக்ஸ் பேனர் விவகாரத்தில் மோசடி நடந்திருப்பதாக பஞ்சாயத்து தலைவர்கள் பலரும் புலம்பி வருகின்றனர்.

தமிழகம் முழுதும் கிராமங்களுக்கு நல்ல சுற்றுப்புறச்சூழல் ஏற்படுத்தி, வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில், 'நம்ம ஊரு சூப்பரு' என்ற விழிப்புணர்வு ப்ளக்ஸ் பேனர் வைக்க, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, சமீபத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில், 'நம்ம ஊரு சூப்பரு' என்ற விழிப்புணர்வு ப்ளக்ஸ் பேனர், அனைத்து பஞ்சாயத்து தலைவர்களிடமும் வழங்கப்பட்டது.

பல மாவட்டங்களில், ஊரக வளர்ச்சித் துறை சார்பில், தனியார் பிரின்டிங் நிறுவனத்திடம் மொத்தமாக கொடுத்து, ப்ளக்ஸ் பேனர் அச்சடித்து, பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்பட்டது. அதற்கான நிதியை, பஞ்சாயத்து நிர்வாகம் வழங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது. சில மாவட்டங்களில், அந்தந்த பஞ்சாயத்து நிர்வாகம், ப்ளக்ஸ் பேனர்களை அச்சடித்துக் கொள்ளுமாறு கூறப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில், 589 பஞ்சாயத்துகளுக்கு, 12 அடி நீளம், 8 அடி அகலம், 6 அடி நீளம், 4 அடி அகலம் என, இரண்டு விதமான அளவுகளில் பேனர்கள் வழங்கப்பட்டன. ஒரு ப்ளக்ஸ் பேனருக்கு, 6,700 ரூபாய், ஜி.எஸ்.டி., 1,209 ரூபாய் என, 7,906 ரூபாய் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் இருந்து வசூல் செய்யப்பட்டு உள்ளது. இதனால், பல பஞ்சாயத்து தலைவர்கள் ஆளும்கட்சி மீது அதிருப்தி அடைந்து உள்ளனர்.


இது குறித்து பஞ்சாயத்து தலைவர்கள் சிலர் கூறியதாவது: விழிப்புணர்வு, விளம்பரம் போன்ற ப்ளக்ஸ் பேனர்கள் வைக்க அந்தந்த பஞ்சாயத்து தலைவர்களிடம் மாடல் கொடுத்து, அவர்களின் வசதிக்கு ஏற்ப அச்சடித்துக் கொள்ளுமாறு யூனியன் அலுவலகத்தில் கூறுவர். தற்போது, ஒரு தனியார் நிறுவனத்திடம் மொத்தமாக அச்சடித்து, பிளக்ஸ் பேனர் ஒன்றுக்கு, 7,906 ரூபாய் வீதம், மூன்று பேனருக்கு, 23 ஆயிரத்து 718 ரூபாய் வசூலித்துஉள்ளனர்.

ஆனால், வெளியில் நாங்கள் பிரின்ட் செய்திருந்தால், மூன்று பிளக்ஸ் பேனர் வெறும், 2,500 ரூபாய் மட்டுமே செலவாகி இருக்கும். தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும், 589 பஞ்சாய்த்துகளுக்கு, 46 லட்சத்து, 56 ஆயிரத்து, 634 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. வேறு வழியில்லாமல் இந்த தொகையை, பஞ்சாயத்து நிர்வாகத்தில் இருந்து வழங்கி உள்ளோம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில், 'நம்ம ஊரு சூப்பரு' பிளக்ஸ் பேனர் விவகாரத்தில் மோசடி நடந்திருப்பதாக பஞ்சாயத்து தலைவர்கள் பலரும் புலம்பி வருகின்றனர்.தமிழகம் முழுதும்

மூலக்கதை