இந்தோனேசியா நிலநடுக்கம் இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் உயிருடன் மீட்பு

தினகரன்  தினகரன்
இந்தோனேசியா நிலநடுக்கம் இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் உயிருடன் மீட்பு

ஜகார்த்தா: இந்தோனேசியாவில்  ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்தது. இந்த இடிபாடுகளில்  சிக்கிய 6 வயது சிறுவன்  2 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தோனேசியாவின்  மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் நகரில் கடந்த 21ம் தேதி சக்தி வாய்ந்த  நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பலியானோரின் எண்ணிக்கை 272 ஆக உயர்ந்து உள்ளது. 150 பேர் மாயமாகி உள்ளனர். 700க்கும்  மேற்பட்டோர் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. குகநாங் துணை மாவட்டத்தில், நக்ராக் கிராமத்தில் நடந்த தேடுதல்  பணியில், இடிபாடுகளில் சிக்கிய அஜ்கா மவுலானா மாலிக் என்ற 6 வயது சிறுவன் 2 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டான். எனினும், இந்த நிலநடுக்கத்தில்  சிறுவனின் பாட்டி உயிரிழந்து விட்டார். அவரது உடல் அருகிலேயே சிறுவன் மீட்கப்பட்டுள்ளான். சிறுவனின் பெற்றோரின் உடல்கள் ஏற்கனவே மீட்கப்பட்டு  விட்டது. இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இதனால்,  இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை  அவர்களின் உறவினர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை