இந்தோனேசிய நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கியிருந்த 6 வயது சிறுவன் உயிருடன் மீட்பு

தினகரன்  தினகரன்
இந்தோனேசிய நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கியிருந்த 6 வயது சிறுவன் உயிருடன் மீட்பு

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏராளமானோர் இறந்தனர். இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இதில் 6 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் நகரில் கடந்த 21ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தினால், வீடுகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் 162 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்தது. நேற்றும் இடிபாடுகளில் இருந்து மேலும் 90 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால், பலி எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களில் பலர் குழந்தைகள். மேலும் 100க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இந்நிலையில், நிலநடுக்க பகுதியில் தொடர்ந்து மீட்பு பணி நடந்தது. இதில், சியாஞ்சூர் பகுதியில் குகநாங் துணை மாவட்டத்தில், நக்ராக் கிராமத்தில் நடந்த தேடுதல் பணியில், இடிபாடுகளில் சிக்கிய 6 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான். 2 நாட்களாக சிக்கியிருந்த அஜ்கா மவுலானா மாலிக் என்ற அந்த சிறுவனை இந்தோனேசிய தேசிய பேரிடர் மேலாண் கழகம் மீட்டுள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தில் சிறுவனின் பாட்டி உயிரிழந்து விட்டார். அவரது உடல் அருகிலேயே சிறுவன் கிடைத்துள்ளான். சிறுவனின் பெற்றோரின் உடல்கள் ஏற்கனவே மீட்கப்பட்டு விட்டது. இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இதனால், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களின் உறவினர்களுக்கு ஏற்பட்டுள்ளது. சீரான இடைவெளியில் மொத்தம் 25 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக இந்தோனேஷிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். கிட்டதட்ட ஜப்பானை போன்றே நிலநடுக்க அபாயம் உள்ள நாடான இந்தோனேஷியாவிலும், நிலநடுக்கத்தால் உயிர்சேதம் ஏற்படாத வண்ணம் வீடுகளும், நிலநடுக்கம் ஏற்படும்போது பொதுமக்கள் தங்களை எப்படி தற்காத்து கொள்ள வேண்டும் என்பது குறித்த பயிற்சியையும் இந்தோனேஷிய அரசு அளித்தால் உயிர்சேதத்தை தவிர்க்கலாம் என மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மூலக்கதை