நடிகை சமந்தா, மருத்துவமனையில் அனுமதி: ரசிகர்கள் அதிர்ச்சி

தினகரன்  தினகரன்
நடிகை சமந்தா, மருத்துவமனையில் அனுமதி: ரசிகர்கள் அதிர்ச்சி

ஐதராபாத்: நடிகை சமந்தா, ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாணா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை சமந்தா. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், கடந்தாண்டு தனது காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு முழு வீச்சில் நடிக்க தொடங்கினார். குறிப்பாக புஷ்பா படத்திற்காக அவர் நடனம் ஆடிய ‘‘ஊ சொல்றியா” பாடல் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.அதே நேரத்தல், சமந்தா நடித்துள்ள யசோதா திரைப்படம் கடந்த 11ம் தேதி வெளியானது. இதில் சமந்தா வாடகை தாயாக நடித்தது நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் டப்பிங் பணிகளை சமந்தா ட்ரிப்ஸ் ஏற்றி கொண்டு செய்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘உங்கள் அனைவருடனும் நான் பகிர்ந்து கொள்ளும் இந்த அன்புதான், வாழ்க்கை எனக்கு அளிக்கும் சவால்களை சமாளிக்க வலிமை தருகிறது. சில மாதங்களுக்கு முன்பு எனக்கு மியோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் என்ற அறிய நோய் இருப்பது கண்டறியப்பட்டது. முழுமையாக குணம் அடைந்த பின்னர் உங்களிடம் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த பிரச்னை குணம் அடைவதற்கு கூடுதல் காலம் எடுக்கும். இந்த பாதிப்பை ஏற்று கொண்டு அதனுடன் போராடி கொண்டிருக்கிறேன். விரைவில் பூரண குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் எனக்கு நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் உண்டு’ என்று கூறியுள்ளார். இவரின் இந்த பதிவு திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் இவர் விரைவில் குணமடைய பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், தற்போது மீண்டும் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமந்தா அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் எதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் சாமந்தா தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் சமந்தா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

மூலக்கதை