ஒரே ஒரு கோல் கேமரூனை சுருட்டிய சுவிஸ்

தினகரன்  தினகரன்
ஒரே ஒரு கோல் கேமரூனை சுருட்டிய சுவிஸ்

தோஹா: அல் ஜனாப் அரங்கில் நேற்று நடந்த ஜி பிரிவு லீக் ஆட்டத்தில்  சுவிட்சர்லாந்து(15வது ரேங்க்)-கேமரூன்(43வது ரேங்க்) அணிகள் மோதின. தர வரிசைக்கு ஏற்ப ஆரம்பத்தில் சுவிட்சர்லாந்து அணிதான் ஆதிக்கம் செலுத்தியது. வழக்கம் போல் முன்னணி அணிகள் கோல் அடிக்கும் முயற்சியில் பின் தங்கியிருக்கும். அதற்கு சுவிஸ் அணியும் விலக்கில்லை.  ஆனால்  அடிக்கடி சுவிஸ் கோல் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய கேமரூனாலும்  கோல் அடிக்க முடியவில்லை. அதனால் முதல் பாதி கோலின்றி சமநிலையில் முடிந்தது.ஆனால் 2வது பாதி தொடங்கியதும் நிலைமை மாறியது. ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் சக வீரர் சாகரி கடத்தி வந்த பந்தை வாங்கிய பிரீல் எம்போலா  அதை கோலாக மாற்றினார். அதனால் சுவீஸ் 1-0 என்ற  கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. அதற்கு பிறகு தளர்வதற்கு பதில் கேமரூன் வீரர்கள் கூடுதல் வேகம் காட்டினர். பந்தும் அதிக நேரம் கேமரூன் வசமானது. அதனால் தடுப்பாட்டம் ஆட வேண்டிய சூழலுக்கு சுவீஸ் தள்ளப்பட்டது. அவ்வப்போது கிடைத்த வாய்ப்புகளை இரு அணிகளாலும் கோலாக மாற்ற முடியவில்லை. சமபலத்தில் ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அதன் பிறகு 2வது பாதியில் எந்த அதிசயமும் நிகழவில்லை. எனவே, சுவிஸ் 1-0 என்ற கோல் கணக்கில் கேமரூனை சுருட்டி வெற்றியை சுவைத்தது.

மூலக்கதை