24 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு மலேஷியாவின் 10வது பிரதமர் ஆனார் அன்வர் இப்ராஹிம்

தினமலர்  தினமலர்
24 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு மலேஷியாவின் 10வது பிரதமர் ஆனார் அன்வர் இப்ராஹிம்

கோலாலம்பூர்: மலேஷியாவில் சமீபத்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் சிறிய கட்சிகள் எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம்க்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டன. இதனையடுத்து அவர் மலேஷியாவின் 10வது பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 24 ஆண்டுகளாக பிரதமராக போராடிவந்த அன்வர் ராஜாவின் காத்திருப்பு தற்போது சாத்தியமாகியுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷிய பார்லி.,க்கு கடந்த 19ம் தேதி தேர்தல் நடந்தது. அங்கு மொத்தம் 222 தொகுதிகள் உள்ளன. இரண்டு தொகுதியில் வேட்பாளர்கள் உயிரிழந்ததை அடுத்து, 220 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 112 இடங்கள் தேவை என்ற நிலையில், எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம் தலைமையிலான சீர்திருத்த கூட்டணி 82 இடங்களை பிடித்தது. முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான மலாய் தேசிய கூட்டணி, 73 இடங்களில் வென்றது.

இக்கூட்டணியின் பான்-மலேஷிய இஸ்லாமியக் கட்சி மட்டும் 49 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆளும் தேசிய கூட்டணி, 30 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. எந்தவொரு கட்சிக்கும், கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அங்கு தொங்கு பார்லி., உருவாகி உள்ளது. இந்த நிலையில் மற்ற சிறிய கட்சிகள் அன்வர் இப்ராஹிம் கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக ஒப்புக்கொண்டதை அடுத்து, அன்வர் இப்ராஹிம் மலேஷியாவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். இது தொடர்பான அறிவிப்பை மன்னர் மாளிகை வெளியிட்டுள்ளது.

யார் இந்த அன்வர் இப்ராஹிம்:

* மலேஷியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற அன்வர் இப்ராஹிமின் வயது 75. இவர் மலேஷியாவின் 10வது பிரதமர் ஆவார். இவர் கடந்த 24 ஆண்டுகளாக மலேஷியாவில் பிரதமர் பதவியை பிடிக்க முயற்சித்தார்.

* மாணவ பருவத்தில் அரசியலில் நுழைந்த இவர், 1971ல் மலேஷியாவில் ஏபிஐஎம் எனும் முஸ்லிம் இளைஞர் இயக்கத்தை உருவாக்கினார். மேலும், கிராமங்களில் நிலவும் வறுமை ஒழிப்பு, பொருளாதார மேம்பாடு தொடர்பாக விழிப்புணர்வு மேற்கொண்டு வந்தார்.

* 1957ல் சுதந்திரம் பெற்றதில் இருந்து மலேஷியாவை ஆட்சி செய்து வந்த பிஎன் எனும் ஐக்கிய மலாய் தேசிய அமைப்பில் இவர் சேர்ந்து நிதியமைச்சரானார். ஆசிய நிதி நெருக்கடி ஏற்பட்ட சமயத்தில் 1998ல் அப்போதைய பிரதமராக இருந்த மகாதீரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

* இதையடுத்து பதவி நீக்கம் செய்யப்பட்டு ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டார். பெரிய அளவில் போராட்டங்கள் நடந்த நிலையில் அன்வர் இப்ராஹிம் கைது செய்யப்பட்டார். மொத்தம் 10 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.

* அதன் பிறகு 2008 முதல் 2015 வரையும், 2018 முதல் 2022 வரையும் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வந்த நிலையில்தான் இன்று அவர் பிரதமராக பொறுப்பேற்றார்.

கோலாலம்பூர்: மலேஷியாவில் சமீபத்தில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் சிறிய கட்சிகள் எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர்

மூலக்கதை