யாருக்கும் எதிராக படம் எடுக்கவில்லை : காரி இயக்குனர் விளக்கம்

தினமலர்  தினமலர்
யாருக்கும் எதிராக படம் எடுக்கவில்லை : காரி இயக்குனர் விளக்கம்

சசிகுமார் நடித்துள்ள படம் காரி. நாளை இந்த படம் தியேட்டர்களில் வெளியாகிறது. இந்த படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகி உள்ளது. ஜல்லிகட்டு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களை படம் கடுமையாக விமர்சிப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால் படத்துக்கு தடை கேட்டு வழக்கு தொடர சில அமைப்புகள் முன்வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் இது குறித்து படக் குழுவினர் நேற்று திடீர் விளக்கம் அளித்தனர். இது தொடர்பாக படத்தின் இயக்குனர் ஹேமந்த் கூறியதாவது: படத்தில் ஜல்லிக்கட்டு ஒரு முக்கிய அம்சமாக இடம் பெற்றுள்ளது. அதேசமயம் இதில் மூன்று வர்க்கத்தை சேர்ந்தவர்களின் பிரச்சனைகளும் அவர்களின் வாழ்வியலும், அவற்றை ஜல்லிக்கட்டு மையப்புள்ளியாக இருந்து எப்படி இணைக்கிறது என்பதையும் பற்றி கூறியுள்ளோம்.

இந்தபடத்தில் 18 வகையான காளைகள், அதேபோல 18 வகையான வீரர்கள் என ஒரு நிஜ ஜல்லிக்கட்டையே நடத்தியுள்ளோம். அரசு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்த விதிமுறைகளை கடைபிடித்து மிகுந்த சிரமத்திற்கு இடையே அந்த காட்சிகளை படமாக்கினோம். நிச்சயமாக இந்த படத்தின் கிளைமாக்ஸ் ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைப்பதாக இருக்கும்.

இந்த படத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வசனங்கள் இடம் பெற்றுள்ளதே தவிர, யாருக்கும் எதிரான வசனங்கள் எதுவும் இல்லை. இந்த விஷயத்தை ஆர்ப்பாட்டமாக சொல்லாமல் கதைக்கு எது தேவையோ அதைமட்டும் கூறியிருக்கிறோம்.

கிராமத்தில் இன்றும் சில பிரச்சினைகளுக்கு பாரம்பரிய முறையில் தீர்வு காணவே விரும்புகிறார்கள். அதற்கு ஒரு வழிமுறையாக ஜல்லிக்கட்டும் இருக்கிறது என்பதை இந்த படத்தில் கூறியுள்ளோம். ஊர் மக்களின் நம்பிக்கை ஜல்லிக்கட்டு, திருவிழா இவற்றை சார்ந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு நாம் என்ன செய்கிறோம், ஜல்லிக்கட்டு நமக்கு என்ன செய்கிறது என்பதை என்னுடைய பார்வையில் நான் கூறியுள்ளேன்.

இதில் சசிகுமார் குதிரைப்பந்தய ஜாக்கியாகவும் ஆடுகளம் நரேன் குதிரைப்பந்தய பயிற்சியாளராகவும் நடித்துள்ளனர். குறிப்பாக குதிரை பந்தயத்திற்கும் ஜல்லிக்கட்டுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. அப்படிப்பட்ட ஒரு நாயகன் கிராமத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும்போது குதிரை பந்தயத்திற்காக தான் கற்ற நுணுக்கங்களை வைத்து ஜல்லிக்கட்டை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை அழகாக காட்டியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது நடிகர் சசிகுமர், தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

மூலக்கதை