ஜப்பானிடம் வீழ்ந்தது முன்னாள் சாம்பியன் ஜெர்மனி

தினகரன்  தினகரன்
ஜப்பானிடம் வீழ்ந்தது முன்னாள் சாம்பியன் ஜெர்மனி

கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் அதிர்ச்சி தோல்விகள் தொடர்கதையாகும் என்பதற்கு மேலும் ஒரு சாட்சியாக, 4 முறை சாம்பியனான ஜெர்மனி அணி ஜப்பானிடம் நேற்று உதை வாங்கியது. நட்சத்திர வீரர் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி சவுதி அரேபியாவிடம் சரண்டராகிய அடுத்த நாளே அரங்கேறியுள்ள இந்த ‘ஹாரர் ஷோ’ உலக அளவில் கால்பந்து ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இ பிரிவில் இடம் பெற்றுள்ள ஜெர்மனி அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் ஜப்பான் அணியை நேற்று எதிர்கொண்டது. அர்ஜென்டினா அணிக்கு மெஸ்ஸி முதல் கோல் போட்டு முன்னிலை கொடுத்தது போலவே, 33வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் குயண்டோகன் அபாரமாக கோல் அடிக்க ஜெர்மனி தரப்பு உற்சாகத்தில் சிறகடித்தது. முதல் பாதியில் மேற்கொண்டு கோல் ஏதும் விழாததால், இடைவேளையின்போது ஜெர்மனி 1-0 என முன்னிலை வகித்தது. 2வது பாதியிலும் அந்த அணி ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அர்ஜென்டினா - சவுதி மோதலின் ரிப்பீட்டாக 75வது நிமிடத்தில் ரிட்சு டோயன், 83வது நிமிடத்தில் டகுமா அசானோ அமர்க்களமாக கோல் அடித்து அசத்த... ஜப்பான் 2-1 என முன்னிலை பெற்றது. நடப்பது என்ன என்பதே புரியாமல் திகைப்பில் ஆழ்ந்த ஜெர்மனி வீரர்கள், பதில் கோல் அடிக்க தலையால் தண்ணி குடித்தும்! ஜப்பானின் ‘கால் வரிசை’ முன்பாக அவர்களின் ஜாலங்கள் எதுவும் எடுபடவில்லை. விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த ஜெர்மனியை வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது. ரஷ்யாவில் நடந்த உலக கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறிய சோகக் கதையை நினைவு படுத்தும் வகையில் அமைந்த இந்த அதிர்ச்சி தோல்வி, ஜெர்மனி அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. அடுத்ததாக 2010ல் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணியின் சவாலையும், கடைசி லீக் ஆட்டத்தில் கோஸ்டா ரிகாவையும் சமாளிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், இ பிரிவில் ஜெர்மனியின் வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

மூலக்கதை