உக்ரைனில் மருத்துவமனை, மின்நிலையங்கள் மீது ரஷ்யா ராக்கெட் தாக்குதல் குழந்தை உட்பட 4 பேர் பலி

தினகரன்  தினகரன்
உக்ரைனில் மருத்துவமனை, மின்நிலையங்கள் மீது ரஷ்யா ராக்கெட் தாக்குதல் குழந்தை உட்பட 4 பேர் பலி

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ராக்கெட் தாக்குதலில் 4 பேர் பலியாகினர். நேட்டோவில் சேர எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் உதவி வருவதால் ரஷ்யா கைப்பற்றிய நகரங்களை ஒவ்வொன்றாக மீட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே ரஷ்யா கடுமையாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜபோரிஜியாவில் உள்ள வில்னியன்ஸ்க் நகர் மீது ரஷ்யா ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியது. இதில் அந்த நகரின் மகப்பேறு மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்தது. பிறந்து ஒரு சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை பரிதாபமாக பலியானது. தாய் மற்றும் டாக்டர் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். அவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். இதேபோல், கீவ்வின் மின்சார நிலையங்களை குறிவைத்து ரஷ்யா அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தியது. இத்தாக்குதலில் கட்டிடம் இடிந்து 3 பேர் இறந்தனர். பல இடங்களில் மின்சாரம் இல்லாததால், இருளில் மூழ்கி கிடக்கிறது.

மூலக்கதை