ரோகித், ராகுல் பின்னடைவு: ஐ.சி.சி., ‘டி–20’ தரவரிசையில் | நவம்பர் 23, 2022

தினமலர்  தினமலர்
ரோகித், ராகுல் பின்னடைவு: ஐ.சி.சி., ‘டி–20’ தரவரிசையில் | நவம்பர் 23, 2022

துபாய்: ஐ.சி.சி., ‘டி–20’ தரவரிசையில் இந்தியாவின் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் பின்தங்கினர். 

சர்வதேச ‘டி–20’ போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ், 890 புள்ளிகளுடன் ‘நம்பர்–1’ இடத்தில் நீடிக்கிறார். இவர், நியூசிலாந்துக்கு எதிரான 2வது ‘டி–20’ போட்டியில் 111 ரன் விளாசினார். தவிர இவர், 2வது இடத்தில் உள்ள பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானை (836) விட 56 ‘ரேட்டிங்’ புள்ளி கூடுதலாக பெற்றுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 3வது ‘டி–20’ போட்டியில் 59 ரன் விளாசிய நியூசிலாந்தின் கான்வே (788) 3வது இடத்துக்கு முன்னேறினார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் (778) 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்ற இந்திய வீரர்களான விராத் கோஹ்லி (650), லோகேஷ் ராகுல் (582), கேப்டன் ரோகித் சர்மா (579) முறையே 13, 19, 21வது இடத்துக்கு தள்ளப்பட்டனர்.

 

பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் புவனேஷ்வர் குமார் (647 புள்ளி), அர்ஷ்தீப் சிங் (616) முறையே 11, 21வது இடத்துக்கு முன்னேறினர். சுழல் வீரர்களான அஷ்வின் (606), யுவேந்திர சகால் (535) முறையே 22, 40வது இடத்துக்கு தள்ளப்பட்டனர்.

 

‘ஆல்–ரவுண்டர்’ தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா (194) ‘நம்பர்–3’ இடத்தில் தொடர்கிறார்.

 

கோஹ்லி ‘நம்பர்–6’: ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்தியாவின் விராத் கோஹ்லி, 722 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருந்து 6வது இடத்துக்கு முன்னேறினார். இந்திய கேப்டன் ரோகித் சர்மா (718) 8வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் பும்ரா (642), சகால் (586) முறையே 11, 20வது இடத்தில் நீடிக்கின்றனர்.

மூலக்கதை