காலிறுதியில் தமிழகம்: விஜய் ஹசாரே டிராபியில் | நவம்பர் 23, 2022

தினமலர்  தினமலர்
காலிறுதியில் தமிழகம்: விஜய் ஹசாரே டிராபியில் | நவம்பர் 23, 2022

பெங்களூரு: விஜய் ஹசாரே டிராபி காலிறுதிக்கு தமிழக அணி முன்னேறியது. கேரளா, தமிழகம் அணிகள் மோதிய லீக் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது.

இந்தியாவில், விஜய் ஹசாரே டிராபி (‘லிஸ்ட் ஏ’ கிரிக்கெட்) 21வது சீசன் நடக்கிறது. மொத்தம் 38 அணிகள், 5 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடந்த ‘சி’ பிரிவு லீக் போட்டியில் தமிழகம், கேரளா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற தமிழக அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

கேரளா அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 287 ரன் எடுத்தது. வத்சல் கோவிந்த் (95*) அரைசதம் விளாசினார். தமிழகம் சார்பில் சந்தீப் வாரியர், முகமது, சோனு யாதவ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

 

பின் களமிறங்கிய தமிழக அணிக்கு சாய் சுதர்சன் (5) ஏமாற்றினார். தமிழக அணி 7 ஓவரில் 43/1 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. ஜெகதீசன் (23), பாபா அபராஜித் (9) அவுட்டாகாமல் இருந்தனர். மழை நீடித்ததால், போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 2 புள்ளி வழங்கப்பட்டது.

 

ஏழு போட்டியில், 5 வெற்றி உட்பட 24 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த தமிழக அணி, ‘சி’ பிரிவில் முதலிடம் பிடித்து காலிறுதிக்குள் நுழைந்தது. மற்ற பிரிவுகளில் முதலிடம் பிடித்த சவுராஷ்டிரா (குரூப் ஏ), கர்நாடகா (குரூப் பி), பஞ்சாப் (குரூப் டி) அணிகள் காலிறுதிக்கு நேரடியாக முன்னேறின.

மூலக்கதை