ஜடேஜா விலகல்: வங்கதேச ஒருநாள் தொடரில் | நவம்பர் 23, 2022

தினமலர்  தினமலர்
ஜடேஜா விலகல்: வங்கதேச ஒருநாள் தொடரில் | நவம்பர் 23, 2022

புதுடில்லி: வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இருந்து ஜடேஜா விலகினார்.

வங்கதேசம் செல்லவுள்ள இந்திய அணி, மூன்று ஒருநாள் (டிச. 4, 7, 10), இரண்டு டெஸ்ட் (டிச. 14–18, 22–26) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணியில் ‘ஆல்–ரவுண்டர்’ ரவிந்திர ஜடேஜா 33, இடம் பிடித்திருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் முழங்கால் காயத்துக்கு ‘ஆப்பரேஷன்’ செய்து கொண்ட இவர், சமீபத்தில் முடிந்த ‘டி–20’ உலக கோப்பையில் பங்கேற்கவில்லை. தவிர இவர், வங்கதேச தொடரில் உடற்தகுதியை பொறுத்து ‘லெவன்’ அணியில் இடம் பெறுவார் என தெரிவிக்கப்பட்டது.

 

தற்போது மறுவாழ்வு பயிற்சி மேற்கொண்டு வரும் ஜடேஜாவின் காயம் முழுமையாக குணமடையாத காரணத்தினால் ஒருநாள் தொடரில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக பெங்கால் ‘ஆல்–ரவுண்டர்’ ஷாபாஸ் அகமது தேர்வு செய்யப்பட்டார். தற்போது ஒருநாள் தொடரில் பங்கேற்க நியூசிலாந்து சென்றுள்ள ஷாபாஸ் அகமது, விஜய் ஹசாரே டிராபியில் 6 போட்டியில் 11 விக்கெட் (எகானமி 4.87) சாய்த்தார். தவிர இவர், இரண்டு அரைசதம் விளாசி பேட்டிங்கிலும் கைகொடுத்தார். இதேபோல வேகப்பந்துவீச்சாளர் யாஷ் தயாள் முதுகுப்பகுதி காயத்தால் விலகினார். இவருக்கு மாற்றாக குல்தீப் சென் தேர்வானார்.

 

இதேபோல டெஸ்ட் தொடரிலும் ஜடேஜா பங்கேற்பது சந்தேகம். ஒருவேளை இவர் விலகினால், உ.பி., இடதுகை சுழற்பந்துவீச்சாளர் சவுரப் குமார் தேர்வு செய்யப்படலாம். கடந்த இரண்டு ரஞ்சி கோப்பை சீசனில் இவர், 58 விக்கெட் சாய்த்திருந்தார்.

மூலக்கதை