கோப்பை வென்றது இந்தியா * மழையால் மூன்றாவது போட்டி ‘டை’ | நவம்பர் 22, 2022

தினமலர்  தினமலர்
கோப்பை வென்றது இந்தியா * மழையால் மூன்றாவது போட்டி ‘டை’ | நவம்பர் 22, 2022

நேப்பியர்: இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது ‘டி–20’ போட்டி, ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிப்படி ‘டை’ ஆனது. 1–0 என தொடரை வென்ற இந்தியா, கோப்பை கைப்பற்றியது.

நியூசிலாந்து சென்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்றது. முதல் போட்டி மழையால் ரத்தாக, அடுத்து வென்ற இந்தியா 1–0 என முன்னிலையில் இருந்தது. மூன்றாவது போட்டி நேற்று நேப்பியரில் நடந்தது. மழை காரணமாக 30 நிமிடம் தாமதமாக போட்டி துவங்கியது. 

மருத்துவ காரணங்களால் வில்லியம்சன் விலகிக் கொள்ள, டிம் சவுத்தீ கேப்டனாக களமிறங்கினார். ‘டாஸ்’ வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்குப் பதில் ஹர்ஷல் படேல் சேர்க்கப்பட்டார். 

மிரட்டிய ‘வேகங்கள்’

நியூசிலாந்து அணியை இந்திய ‘வேகங்கள்’ மிரட்டினர். துவக்க வீரர்கள் பின் ஆலன் (3), அரைசதம் அடித்த கான்வேயை (59), அர்ஷ்தீப் சிங் வெளியேற்றினார். சாப்மன் (12), பிலிப்ஸ் (54) என இருவரையும் அவுட்டாக்கினார் முகமது சிராஜ். மீண்டும் அசத்திய சிராஜ், நீஷம் (0), சான்ட்னரை (3) வீழ்த்தினார். மிட்செல் (10), சோதி (0), அர்ஷ்தீப் சிங்கிடம் சரண் அடைந்தனர்.

சவுத்தீயை (6), ஹர்ஷல் படேல் போல்டாக்கினார். நியூசிலாந்து அணி 19.4 ஓவரில் 160 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 4, சிராஜ் 4 விக்கெட் வீழ்த்தினர். 

சரிந்த விக்.,

இந்திய அணிக்கு ரிஷாப் பன்ட் (11), இஷான் கிஷான் (10) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. ஸ்ரேயாஸ் ‘டக்’ அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். சூர்யகுமாரும் (13) நிலைக்கவில்லை. இந்திய அணி 9 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 75 ரன் எடுத்த போது, மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. 

தொடர்ந்து மழை நீடிக்க, ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிப்படி வெற்றியாளர் முடிவு செய்யப்பட்டது. இதன் படி 9 ஓவரில் இரு அணியின்  ஸ்கோரும் சம நிலையில் (75/4) இருந்தன. இதனால் போட்டி ‘டை’ ஆனது. சர்வதேச ‘டி–20’ ல் ‘டை’ ஆன 25வது போட்டியாக இது ஆனது.

இருப்பினும் இரண்டாவது போட்டியில் வென்ற இந்தியா 1–0 என தொடரை வென்று, கோப்பை கைப்பற்றியது. ஆட்டநாயகன் ஆனார் சிராஜ். சூர்யகுமார் தொடர்நாயகனாக தேர்வானார். 

இரு அணிகள் மோதும் ஒருநாள் தொடர் வரும் 25ல் துவங்குகிறது.

 

3

சர்வதேச ‘டி–20’ ல் ‘டக்வொர்த் லீவிஸ்’ காரணமாக ‘டை’ ஆனது நேற்று மூன்றாவது முறையாக நடந்தது. இதற்கு முன் நெதர்லாந்து–மலேசியா (2021), மால்டா–ஜிப்ரால்டர் (2021) அணிகள் மோதிய போட்டி இதுபோல ‘டை’ ஆனது. 

* தவிர, 2003 தென் ஆப்ரிக்கா–இலங்கை (பெண்கள் உலக கோப்பை), 2011ல் இந்தியா–இங்கிலாந்து, 2013ல் தென் ஆப்ரிக்கா–வெஸ்ட் இண்டீஸ் மோதிய 3 ஒருநாள் போட்டிகள் ‘டை’‘ ஆகின. 

 

4

இந்திய அணி மோதிய ‘டி–20’ போட்டி நான்காவது முறையாக ‘டை’ ஆனது. 2007ல் பாகிஸ்தானுக்கு எதிரான ‘டை’ ஆன போட்டியில் இந்தியா ‘பவுல் அவுட்’ முறையில் வென்றது/

* மற்ற மூன்று போட்டிகளும் நியூசிலாந்துக்கு எதிராக ‘டை’ ஆகின. இதில் 2020ல் ‘டை’ ஆன இரு போட்டியில் இந்தியா, சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

* நேற்றைய போட்டி மழை காரணமாக ‘டை’ ஆக, அப்படியே கைவிடப்பட்டது. 

மூலக்கதை