ஆஸி., அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி * ஹெட் , வார்னர் சதம் | நவம்பர் 22, 2022

தினமலர்  தினமலர்
ஆஸி., அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி * ஹெட் , வார்னர் சதம் | நவம்பர் 22, 2022

மெல்போர்ன்: மூன்றாவது ஒருநாள் போட்டியில் அசத்திய ஆஸ்திரேலிய அணி, ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிப்படி 221 ரன்னில் இங்கிலாந்தை வீழ்த்தியது. ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் கோப்பை வென்றது. 

ஆஸ்திரேலியா சென்ற இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா 2–0 என தொடரை வென்றது. மூன்றாவது, கடைசி போட்டி மெல்போர்னில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

வார்னர் சதம்

ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், டிராவிஸ் ஹெட் ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. இரு முறை ஏற்பட்ட மழை காரணமாக போட்டி 48 ஓவர்களாக குறைக்கப்பட்டது. வார்னர் சதம் விளாசினார். ஹெட் 130 பந்தில் 152 ரன் குவித்து திரும்பினார். இது இவரது அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் ஆனது. 

ஸ்மித் (21), ஸ்டாய்னிஸ் (12) விரைவில் திரும்ப, மார்ஷ் 16 பந்தில் 30 ரன் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி 48 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 355 ரன் குவித்தது. மெல்போர்ன் மைதானத்தில் ஒருநாள் போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது. இங்கிலாந்தின் ஸ்டோன் 4 விக்கெட் சாய்த்தார்.

மாறிய இலக்கு

 ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிப்படி 48 ஓவரில் இங்கிலாந்து 364 ரன் எடுக்க வேண்டும் என களமிறங்கியது. ஜேசன் ராய் (33), வின்ஸ் (22), மொயீன் அலி (18) அணியை கைவிட்டனர். பின் வரிசையில் சாம் கர்ரான் (12), டாசன் (18) நிலைக்கவில்லை. இங்கிலாந்து அணி 31.4 ஓவரில் 142 ரன்னுக்கு சுருண்டது. ஆஸ்திரேலியா 3–0 ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் கோப்பை வசப்படுத்தியது. ஜாம்பா 4, கம்மின்ஸ், அபாட் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

மூலக்கதை