காஷ்மீர் மக்களுடன்தான் பேசுவோம் பாக்.குடன் எந்த பேச்சும் கிடையாது: அமித்ஷா திட்டவட்டம்

தினகரன்  தினகரன்
காஷ்மீர் மக்களுடன்தான் பேசுவோம் பாக்.குடன் எந்த பேச்சும் கிடையாது: அமித்ஷா திட்டவட்டம்

பாரமுல்லா: பாகிஸ்தானுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பாரமுல்லாவில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட அமித் ஷா பேசுகையில், ‘சிலர் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறுகின்றனர். நாம் ஏன் பாகிஸ்தானுடன் பேச வேண்டும்? நாங்கள் பாகிஸ்தானுடன் பேச மாட்டோம். நாங்கள் பாரமுல்லா மக்களிடம் பேசுவோம். காஷ்மீர் மக்களுடன் பேசுவோம். பிரதமர் மோடி தலைமையிலான அரசானது தீவிரவாதத்தை ஒருபோதும் சகித்து கொள்ளாது. தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டின் அமைதியான பகுதியாக ஜம்மு காஷ்மீரை மாற்றுவோம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எத்தனை கிராமங்களுக்கு மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் காஷ்மீரில் உள்ள அனைத்து கிராமங்களும் மின்இணைப்பு கிடைத்து உள்ளதை உறுதி செய்துள்ளோம்’ என்றார்.* வெளிப்படை தேர்தல் ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு சென்றுள்ள அமித் ஷா தேர்தல் குறித்து பேசியதாவது: * வாக்காளர் பட்டியல் வெளியிடும் பணி முடிவடைந்ததும் முழு வெளிப்படைத்தன்மையும் சட்டமன்ற தேர்ரதல் நடத்தப்படும். * ஜம்மு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இங்கு ஆட்சி செய்வார்கள்.* அப்துல்லாக்கள், முப்திகள் மற்றும் காந்திகள் மட்டுமே ஆட்சியில் இருந்தார்கள். * இனி உங்கள் சொந்த பிரதிநிதிகள் ஆட்சி செய்வார்கள். * ஜனநாயகம் மற்றும் இங்கு அமைக்கப்படும் தொழிற்சாலைகள் மற்றும் பிற வளர்ச்சி பணிகள் மூலமாக காஷ்மீர் பயனடையும்.* 42,000 பேர் பலிஜம்முவில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து, புது திட்டங்களுக்கு அமித் ஷா அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், ‘காஷ்மீரில் தீவிரவாதத்தால் இதுவரை 42,000 பேர் உயிரிழந்து உள்ளனர். அரசில் அமர்ந்து கொண்டு தீவிரவாதத்துக்கு ஆதரவு அளித்தவர்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி எறிபவர்கள் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். தீவிரவாத சம்பவங்கள் 56 சதவீதமாகவும், பாதுகாப்பு படையினர் உயிரிழப்பது 86 சதவீதமாகவும் குறைந்துள்ளது’ என்று குறிப்பிட்டார்.

மூலக்கதை