அமித்ஷா வருகையால் மெகபூபாவுக்கு வீட்டுச்சிறை: போலீஸ் மறுப்பு

தினகரன்  தினகரன்
அமித்ஷா வருகையால் மெகபூபாவுக்கு வீட்டுச்சிறை: போலீஸ் மறுப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு அமித் ஷா வருகையால், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதை போலீசார் மறுத்துள்ளனர். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா 3 நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் வந்துள்ளார்.  உள்துறை அமைச்சர் அமித் ஷா ஸ்ரீநகரில் இருந்து 54 கி.மீ. தொலைவில் உள்ள வடக்கு காஷ்மீரில் உள்ள பாரமுல்லாவிற்கு சென்று பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தன்னை வீட்டு சிறையில் வைத்துள்ளதாக முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து மெகபூபா  தனது டிவிட்டர் பதிவில், ‘உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி விட்டதாக கூறி வருகிறார். ஆனால் நான் பத்தானில் நடக்கும் எனது கட்சி தொண்டரின் திருமணத்துக்கு செல்ல விரும்பியதால் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளேன். முன்னாள் முதல்வரின் அடிப்படை உரிமைகள் எளிதாக ரத்து செய்யப்படும்போது, சமானியரின் நிலையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுடன் வீட்டின் பிரதான நுழைவு வாயில் பூட்டப்பட்டு இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து உள்ளார். இதுகுறித்து, ஸ்ரீநகர் போலீசார் கூறுகையில். , ‘மெகபூபா தாமாகவே உள்ளிருந்து வீட்டை பூட்டிக்கொண்டு இருக்கிறார். கேட்டின் வெளிப்புறத்தில் எந்த பூட்டும் பூட்டப்படவில்லை’ என்று மறுத்துள்ளனர். * வேற்றுமையில் ஒற்றுமைதேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா செனாப் பள்ளத்தாக்கில் 4 நாள் சுற்றுப்பயணம்  மேற்கொண்டுள்ளார். இரண்டாவது நாளான நேற்று அஸ்தாங்கம் பகுதியில் பொதுமக்களிடையே பரூக் அப்துல்லா பேசுகையில், ‘வேற்றுமையில் ஒற்றுமை என்பது அனைத்து காலங்களிலும், அனைத்து சூழ்நிலைகளிலும் அனைவரிடமும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே நமது நம்பிக்கையாக இருக்க வேண்டும். நமது சமூகத்தில் பல்வேறு பிரிவினரிடையே ஒற்றுமை இல்லாமல் ஜம்முவில் எதையும் சாதிப்பதற்கான வழி இல்லை’ என்றார்.

மூலக்கதை