குஜராத், மகாராஷ்டிராவில் ரூ.317 கோடி கள்ளநோட்டு பறிமுதல்: கூரியர் மூலம் புழக்கத்தில் விட முயன்ற கும்பல் கைது

தினகரன்  தினகரன்
குஜராத், மகாராஷ்டிராவில் ரூ.317 கோடி கள்ளநோட்டு பறிமுதல்: கூரியர் மூலம் புழக்கத்தில் விட முயன்ற கும்பல் கைது

காந்திநகர்: குஜராத்தில் ரூ.317 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதை கூரியர் நிறுவனம் மூலமாக பட்டுவாடா செய்ய முயன்ற கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் சிலர் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதேபோல், மகாராஷ்டிராவிலும் கள்ளநோட்டுகள் புழக்கம் இருப்பதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து குஜராத் மற்றும் மகாராஷ்டிராவின் பல்வேறு இடங்களில் மாநில போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட முக்கிய குற்றவாளி விகாஸ் ஜெயின் உட்பட 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.அவர்களது குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.317 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். குறிப்பாக மகாராஷ்டிராவில் மட்டும் ரூ.227 கோடி மதிப்புள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘முக்கிய குற்றவாளி விகாஸ் ஜெயின் குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் கூரியர் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். கள்ள நோட்டுகளை அச்சிட்டு அதை தனது கூரியர் நிறுவனம் மூலம் மும்பைக்கு கொண்டு வந்துள்ளார். பின்னர் அதை தனது கூட்டாளிகளுடன் இணைந்து புழக்கத்தில் விட முயற்சித்து உள்ளனர்’ என்று தெரிவித்தனர்.

மூலக்கதை