இந்திய கலை நயத்துடன் இந்து கோயில் துபாயில் திறப்பு

தினகரன்  தினகரன்
இந்திய கலை நயத்துடன் இந்து கோயில் துபாயில் திறப்பு

துபாய்: துபாயில் வசிக்கும் இந்து மதத்தினருக்காக இந்திய கலை நயத்துடன் கூடிய இந்து கோயில் திறக்கப்பட்டுள்ளது. துபாயின் `கோயில்களின் கிராமம்’ என்று அழைக்கப்படும் ஜெபல் அலி கிராமத்தில் இந்திய கலை நயத்துடன்புதிதாக கட்டப்பட்டுள்ள இந்து கோயிலை ஐக்கிய அரபு அமீரகத்தின் சகிப்புத்தன்மை துறை அமைச்சர் ஷேக் நயான் பின் முபாரக் அல் நயான் நேற்று முன்தினம் திறந்து வைத்தார். இதில் துபாய்க்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர் கலந்து கொண்டார். கோயில் திறப்புக்காக ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு இந்திய தூதரகம் அதன் அதிகாரப்பூர்வ டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளது.இந்த கிராமத்தில் ஏற்கனவே 7 கிறிஸ்தவ தேவாலயங்கள், குருத்வாரா ஒன்று உள்ளது. இந்நிலையில், கூடுதலாக இந்து கோயிலும் திறக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவின் போது, `ஓம் சாந்தி சாந்தி ஓம்’ என்ற வேத மந்திரம் ஒலிக்கப்பட்டது. விழாவுக்கு வந்தவர்களை இசை கலைஞர்கள் மேள தாளம் முழங்க வரவேற்றனர்.சிறப்பு அம்சங்கள் * 70,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள கோயிலின் கோபுரங்கள் வெண்கலத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளன.* கோயிலின் உட்புறத்தில் 16 தெய்வங்கள் இடம் பெற்றுள்ளன.* வெள்ளை பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ள கோயிலின் தூண்கள், முகப்பு பகுதி, திரைகள் இந்திய மற்றும் அரபு முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. * பிரார்த்தனை மண்டபத்தில் இளம் சிவப்பு தாமரை முப்பரிமாண வடிவில் அமைக்கப்பட்டு, ஏராளமான மணிகள் தொங்க விடப்பட்டுள்ளன. * தினசரி 1000 முதல் 1200 பக்தர்களுக்கு கியூஆர் குறியீடு அடிப்படையில் முன்பதிவு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.* கோயில் காலை 6:30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலக்கதை