காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழந்ததால் சர்ச்சை!: இந்திய நிறுவனம் தயாரித்த இருமல், சளி மருந்துகளை பயன்படுத்த தடை.. WHO எச்சரிக்கை..!!

தினகரன்  தினகரன்
காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழந்ததால் சர்ச்சை!: இந்திய நிறுவனம் தயாரித்த இருமல், சளி மருந்துகளை பயன்படுத்த தடை.. WHO எச்சரிக்கை..!!

ஜெனிவா: இந்திய மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 4 இருமல் மற்றும் சளி மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆப்ரிக்க நாடான காம்பியாவில் கடந்த ஜூலை மாதம் 5 வயதுக்கு உட்பட்ட 66 குழந்தைகள் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தன. இவர்கள் டெல்லியை மையமாக கொண்டு செயல்படும் மெய்டன் பார்மா சூட்டிக்கல்ஸ் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மருந்துகளை உட்கொண்டதால் இறந்ததாக காம்பியா அரசு சந்தேகித்துள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கும் நிலையில், அந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 4 இருமல் மற்றும் சளி மருந்தை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த மருந்துகள் விநியோகிக்கப்பட்டிருந்தால் அது உடனடியாக கண்டறிந்து திரும்ப பெறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. டை எத்திலீன் கிளைக்கால் அதிக அளவில் கலந்த மருந்துகளை எடுத்துக்கொண்டால் வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, தலைவலி, சிறுநீரக பாதிப்பு, மனநிலை பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படும் என்பதால் குரோம் மெத்தஸைன், பேபி கார்ப் சிரப் உள்ளிட்ட 4 மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் ஆபத்தானது என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. குழந்தைகளின் உயிருக்கு உலை வைக்கும் இதுபோன்ற தரமற்ற மருந்துகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. மேலும் தங்களது நாட்டில் இதுபோன்ற மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றனவா? என்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

மூலக்கதை