உலக கோப்பை டி.20 தொடரில் இருந்து விலகிய பும்ராவுக்கு மாற்றாக யார் என தெரியவில்லை: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி

தினகரன்  தினகரன்
உலக கோப்பை டி.20 தொடரில் இருந்து விலகிய பும்ராவுக்கு மாற்றாக யார் என தெரியவில்லை: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி

இந்தூர்: இந்தியா-தென்ஆப்ரிக்கா இடையே 3வது மற்றும் கடைசி டி.20 போட்டி நேற்றிரவு இந்தூரில் நடந்தது. கே.எல்.ராகுல், விராட் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்ரிக்கா 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 227ரன் குவித்தது. ரிலீ ரோசோவ் நாட் அவுட்டாக 48 பந்தில் 7பவுண்டரி,8 சிக்சருடன் 100 ரன் விளாசினார். பவுமா 3, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 23 ரன்னில் வெளியேற  டிகாக் 43 பந்தில் 6பவுண்டரி,4சிக்சருடன் 68 ரன்னும் டேவிட் மில்லர் ஆட்டம் இழக்காமல் 5 பந்தில் 3 சிக்சருடன் 19 ரன்னும் எடுத்தனர். இந்திய பவுலிங்கில் தீபக் சாஹர், உமேஷ் யாதவ் தலா ஒருவிக்கெட் வீழ்த்தினர். பின்னர்  களம் இறங்கிய இந்திய அணியில் ரோகித்சர்மா ரபாடா வீசிய முதல்ஓவரின் 2வது பந்திலேயே போல்டாக, ஸ்ரேயாஸ் அய்யர் 1 ரன்னில் நடையை கட்டினார். ரிஷப் பன்ட் தனது பங்கிற்கு 27ரன்(14பந்து) அடித்தார். அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 21 பந்தில், 4பவுண்டரி,4சிக்சருடன் 46ரன் எடுக்க , சூர்யகுமார் யாதவ் 8, அக்சர்பட்டேல் 0, ஹர்சல்பட்டேல் 17, தீபக் சாஹர் 31 (17பந்து,2பவுண்டரி,3சிக்சர்), உமேஷ் யாதவ் நாட் அவுட்டாக 20 ரன் எடுத்தனர். 18.3ஓவரில் 178 ரன்னுக்கு இந்தியா ஆல்அவுட் ஆனது. இதனால் 49 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. தென்ஆப்ரிக்க பவுலிங்கில்டுவைன் பிரிட்டோரியஸ் 3, ரபாடா, நிகிடி, மகாராஜ் தலா 2விக்கெட் வீழ்த்தினர். முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா 2-1 என தொடரை கைப்பற்றியது. தென்ஆப்ரிக்காவின் ரிலீ ரோசோவ் ஆட்டநாயகன் விருதும், இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.  தோல்விக்கு பின் கேப்டன் ரோகித்சர்மா அளித்த பேட்டி: முடிவு என்னவாக இருந்தாலும் ஒரு அணியாக நாங்கள் முன்னேற்றமடைந்து வருகிறோம். நாங்கள் அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டாலும் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன். நாங்கள் எங்களது பந்துவீச்சில் கவனம் கொடுக்க வேண்டும். பவர்பிளேவில் என்ன செய்ய வேண்டும் மிடில் ஓவர் மற்றும் டெத் ஓவர்களில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெளிவாக இருக்க வேண்டும். நாங்கள் இரு சிறந்த அணிகளுடன் விளையாடியுள்ளோம். இருப்பினும், நாங்கள் இன்னும் எப்படி எங்களது ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். இது ஒரு சவாலான காரியம். ஆனால், நாங்கள் அதற்கான விடையைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறோம்.  உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் உள்ள வீரர்கள் பலருக்கு ஆஸ்திரேலிய மைதானங்கள் புதிது. மொத்தமே 7-8 பேர் வரையே இதுவரை ஆஸ்திரேலியா சென்றுள்ளோம். அதனால்தான் இம்முறை நாங்கள் அங்கு சீக்கிரமாகச் செல்கிறோம். புதிய வீரர்கள் ஆடுகளத்தின் தன்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும். உலகக் கோப்பை லீக் ஆட்டங்களுக்கு முன்னதாக நாங்கள் இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளோம், பும்ரா டி.20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறி உள்ளார், எனவே ஆஸ்திரேலியாவில் பந்துவீசிய அனுபவம் உள்ள ஒரு பந்து வீச்சாளரைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த பந்து வீச்சாளர் யாராக இருக்கப் போகிறார் என்று தெரியவில்லை, நாங்கள் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றவுடன் பார்ப்போம், அதை அங்கே கண்டுபிடிப்போம், என்றார்.

மூலக்கதை