மும்பையில் மின்சார ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து 7 வயது சிறுவன் பலி: போலீஸ் விசாரணை

தினகரன்  தினகரன்
மும்பையில் மின்சார ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து 7 வயது சிறுவன் பலி: போலீஸ் விசாரணை

மும்பை: மும்பையில் மின்சார ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து சிதறியதில் 7 வயது சிறுவன் உயிரிழந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் சிக்கனம் எதிரொலியாக நாடு முழுவதும் மின்சார பேட்டரியில் இயங்கும் மோட்டார் சைக்கிள்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், மின்சார ஸ்கூட்டர்கள் பல இடங்களில் தீப்பற்றி வெடிக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மும்பை அருகே வசாய் பகுதியை சேர்ந்த சர்பாய் அன்சாரி என்பவர் தனது வீட்டில் நேற்று இரவு மின்சார ஸ்கூட்டருக்கு சார்ஜ் செய்து இருக்கிறார். அதிகாலை 5.30 மணியளவில் பயங்கர சத்தத்துடன் மின்சார ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து சிதறியது. சத்தத்தை கேட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் அலறியடித்து எழுந்துள்ளனர். பேட்டரி வெடித்ததில் அந்த அறையில் தூங்கி கொண்டிருந்த அன்சாரியின் 7 வயது மகன் ஷபீருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிறுவனுடன் தூங்கி கொண்டிருந்த அவரது பாட்டிக்கும் காயம் ஏற்பட்டது. 80% தீ காயமடைந்த சிறுவன் ஷபீரை பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுவன் ஷபீர் பரிதாபகமாக உயிரிழந்து விட்டார். மின்சார ஸ்கூட்டர் வெடித்து சிதறியது குறித்து வசாய் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.     

மூலக்கதை