பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

தினகரன்  தினகரன்
பாகிஸ்தானில் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் வேகமாக பரவும் மலேரியா: மருத்துவமனைகள் நோக்கி மக்கள் படையெடுப்பு..!!

இஸ்லாமாபாத்: வரலாறு காணாத வெள்ள பாதிப்பில் இருந்து பாகிஸ்தான் மெல்ல மீண்டு வரும் நிலையில், பல்வேறு மாகாணங்களில் மலேரியா நோய் பரவல் தீவிரமடைந்து வருகிறது. பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் முதல் மேகவெடிப்பு ஏற்பட்ட பல்வேறு மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. குறிப்பாக ஆகஸ்டில் கொட்டிய கனமழையால் ஆகஸ்ட் 25ம் தேதி அவசர நிலையை பிறப்பிக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்தது. பாகிஸ்தானின் சிந்து, பாலிஸ்திஸ்தான், கைபர், கில்கிட், பஞ்சாப் ஆகிய மாகாணங்கள் வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில் மழை தணிந்து ஒரு மாதம் கடந்தும் பல இடங்களில் நீர் வடியவில்லை. இதனால் பாகிஸ்தானின் தெற்கு மாகாணங்களில் மலேரியா தீவிரமாக பரவி வருகிறது. குடிநீருடன் கழிவுநீர் கலப்பதால் கடும் வயிற்றுப்போக்கு, டெங்கு, தோல் மற்றும் கண் நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் திரள்வதால் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. தற்போதும் வெள்ளத்தில் மூழ்கி இருக்கும் பல்வேறு நகரங்களில் இருந்து மலேரியா, வயிற்றுப்போக்கு, கண் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். பாகிஸ்தானில் பல மாகாணங்களில் வெள்ளம் வடியாததால் 2 மாதங்களுக்கும் மேல் மக்கள் தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசு மூலமாக கிடைக்கும் சிறிதளவு உணவு பொருட்களை கொண்டு காலத்தை கடத்தி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். வெள்ளம் தங்களது வீடுகள், உடமைகளை அடித்து சென்றுவிட்டதால் அரசு மறுவாழ்விற்கு உதவ வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வரலாறு காணாத வண்ணம் பாகிஸ்தானில் இதுவரை 1700 பேரின் உயிர்களை பறித்து சென்றுள்ளது. அதில் 550 பேர் சிறார்கள். வெள்ளம் முற்றிலும் வடியாத நிலையில், அரசின் தற்காலிக கூடாரங்களில் சுமார் 6 லட்சம் பேர் தற்போது வசித்து வருகின்றனர்.

மூலக்கதை