தெ.ஆப்ரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா; டெத் ஓவர் பவுலிங் கவலையளிக்கிறது: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி

தினகரன்  தினகரன்
தெ.ஆப்ரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா; டெத் ஓவர் பவுலிங் கவலையளிக்கிறது: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி

கவுகாத்தி: இந்தியா-தென்ஆப்ரிக்கா இடையே 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் 2வது போட்டி நேற்றிரவு கவுகாத்தியில் நடந்தது. டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன் குவித்தது. கேப்டன் ரோகித்சர்மா 37 பந்தில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 43, கே.எல்.ராகுல் 28 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 57, சூர்யகுமார் யாதவ் 22 பந்தில் 5 பவுண்டரி, 5சிக்சருடன் 61 ரன் எடுத்து அவுட் ஆகினர். விராட்கோஹ்லி 49 (28 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), தினேஷ் கார்த்திக் 7 பந்தில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 17 ரன் எடுத்து களத்தில் இருந்தனர்.பின்னர் களம் இறங்கிய தென்ஆப்ரிக்க அணியில் கேப்டன் பவுமா, ரிலீ ரோசோவ் டக்அவுட் ஆக மார்க்ரம் 19 பந்தில் 33 ரன் அடித்தார். டிகாக்-டேவிட்மில்லர் ஜோடி 4வது விக்கெட்டிற்கு 174 ரன் அடித்தபோதும் வெற்றி இலக்கை எட்டமுடியவில்லை. 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களே தென்ஆப்ரிக்கா எடுத்ததால் 16 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. டேவிட்மில்லர் 47 பந்தில், 8 பவுண்டரி, 7 சிக்சருடன் 106, டிகாக் 48 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 69 ரன்னில் களத்தில் இருந்தனர். இந்திய பவுலிங்கில் அர்ஷ்தீப் சிங் 2விக்கெட் வீழ்த்தினார். கே.எல்.ராகுல் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றி மூலம் 2-0 என இந்தியா தொடரை கைப்பற்றிய நிலையில், 3வதுமற்றும் கடைசி டி.20 போட்டி நாளை இந்தூரில் நடக்கிறது.வெற்றிக்கு பின் கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:‘‘இன்று பேட்டர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டனர். இப்படியொரு ஆட்டத்தை விளையாட வேண்டும் என்றுதான் நான் ஆசைப்பட்டேன். பேட்டிங் வரிசையில் அனைவரும் பங்களிப்பை வழங்க கூடியவர்களாக இருக்கிறார்கள். தற்போது முக்கிய பிரச்னை பந்துவீச்சு துறைதான். கடந்த 5-6 போட்டிகளில் டெத் ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து வருகிறார்கள். இன்றைய போட்டியிலும் படுமோசமாக சொதப்பினர். டெத் ஓவர் பவுலிங்தான், ஆட்டத்தின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும். தொடர்ந்து இதேபோல் செயல்பட்டு வருவது கவலையான விஷயம்தான். பவுலர்களால் விரைந்து தங்களது குறைகளை சரிசெய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சூர்யகுமார் யாதவ் பார்ம்மை தக்க வைக்க இனி டி20 உலகக் கோப்பைவரை ஒரு போட்டியில்கூட விளையாட மாட்டார். நேரடியாக 23ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்குவார்’’ எனக் கூறினார்.ெதன்ஆப்ரிக்க கேப்டன் பவுமா கூறுகையில், பந்துவீச்சில் எங்களுக்கு இது சிறந்த ஆட்டம் அல்ல.எங்களால் திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை. 220 ரன்னுக்கு இந்தியாவை கட்டுப்படுத்தியிருந்தால் சேசிங் செய்யமுடியும் என நினைத்தேன். ஆனால் 237 ரன் மிக அதிகமாக இருந்தது. மில்லர் அற்புதமாக ஆடினார், என்றார்.எனக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்ததில் ஆச்சரியம்: ஆட்டநாயகன் கே.எல்.ராகுல் கூறுகையில், எனது பேட்டிங்கால் திருப்தி அடைந்தேன். முதல் 2-3 ஓவர்களுக்குப் பிறகு, 180-190 ரன் ஒரு நல்ல இலக்காக இருக்கும் என நினைத்தோம். எனக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்ததில் ஆச்சரியமாக இருக்கிறது. சூர்யா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். விராட் பேட்டிங் செய்த விதம் அருமை. இதுபோல் தினேஷும் நன்றாக ஆடினார். இந்தியாவில் எப்பொழுதும் ரசிகர்கள் கூட்டம் கூடும். நாங்கள் இந்த அளவு சத்தத்துடன் ஸ்டேடியம் நிரம்பிய ரசிகர்கள் முன் விளையாடி சிறிது காலம் ஆகிவிட்டது. இது நன்றாக இருந்தது, என்றார்.பிட்ஸ்...பிட்ஸ்...* சேசிங்கில் நேற்று டேவிட் மில்லர் சதம் அடித்தும் அந்த அணி தோல்வியடைந்தது டி.20 வரலாற்றில் இது 2வது நிகழ்வாகும். இதற்கு முன் வெ.இண்டீசுக்கு எதிராக கே..எல்.ராகுல் 110 ரன் விளாசியும் இந்தியா தோல்வி அடைந்தது.* டெத் ஓவர்களில் (16-20) நேற்று இந்தியா 82, தென்ஆப்ரிக்கா 78 ரன்களை விட்டுக்கொடுத்தனர். 8 ஓவர்களில் 160 ரன் அடிக்கப்பட்டது. இதுவும் ஒரு புதிய சாதனையாகும்.* சொந்த மண்ணில் தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக டி.20 தொடரை இந்தியா முதன்முறையாக கைப்பற்றி உள்ளது. கடந்த 2005ல் தென்ஆப்ரிக்கா 2-0 என வென்ற நிலையில், 2019ல் 1-1, கடந்த ஜூனில் 2-2 என தொடர் சமனில் முடிந்தது.* 61 ரன் அடித்த சூர்யா குறைவான பந்துகளில் டி.20யில் 1000 ரன் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர் 573 பந்தில் இந்த இலக்கை கடந்தார். மேக்ஸ்வெல் 604, கொலின் மன்றோ 635 பந்தில் இதற்கு முன் 1000 ரன் அடித்துள்ளனர்.* டி.20 பேட்ஸ்மேன்களுக்கான புதிய தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. தற்போது 2வது இடத்தில் உள்ள சூர்யகுமார், பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை