சச்சின் அணி சாம்பியன்: உலக ‘லெஜண்ட்ஸ்’ கிரிக்கெட்டில் | அக்டோபர் 02, 2022

தினமலர்  தினமலர்
சச்சின் அணி சாம்பியன்: உலக ‘லெஜண்ட்ஸ்’ கிரிக்கெட்டில் | அக்டோபர் 02, 2022

ராய்ப்பூர்: உலக ‘லெஜண்ட்ஸ்’ கிரிக்கெட்டில் சச்சின் தலைமையிலான இந்திய அணி மீண்டும் கோப்பை வென்றது. பைனலில், 33 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

இந்தியாவில், ‘ரோடு சேப்டி உலக சீரிஸ்’ இரண்டாவது சீசன் நடந்தது. இதில், ஓய்வு பெற்ற ‘லெஜண்ட்ஸ்’ வீரர்கள் அடங்கிய உலகின் எட்டு அணிகள் பங்கேற்றன. ராய்ப்பூரில் நடந்த பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின.

 

ஓஜா அபாரம்: ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த இந்திய அணிக்கு கேப்டன் சச்சின் ‘கோல்டன் டக்–அவுட்டாகி’ ஏமாற்றினார். ரெய்னா (4) நிலைக்கவில்லை. வினய் குமார் (36) ஓரளவு கைகொடுத்தார். யுவராஜ் சிங் (19), இர்பான் பதான் (11) சோபிக்கவில்லை. அபாரமாக ஆடிய துவக்க வீரர் நமன் ஓஜா சதம் விளாசினார். யூசுப் பதான் (0) சொதப்பினார்.

 

இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 195 ரன் குவித்தது. ஓஜா (108 ரன், 71 பந்து, 2 சிக்சர், 15 பவுண்டரி), ஸ்டூவர்ட் பின்னி (8) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் நுவன் குலசோகரா 3 விக்கெட் வீழ்த்தினார்.

 

சவாலான இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு தில்ஷன் முனவீரா (8), சனத் ஜெயசூர்யா (5), கேப்டன் தில்ஷன் (11), உபுல் தரங்கா (10) ஏமாற்றினர். அசேல குணரத்னே (19), ஜீவன் மெண்டிஸ் (20) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய இஷான் ஜெயரத்னே (51) அரைசதம் கடந்தார். இலங்கை அணி 18.5 ஓவரில் 162 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் வினய் குமார் 3, அபிமன்யு மிதுன் 2 விக்கெட் கைப்பற்றினர்.

 

இதனையடுத்து இந்திய ‘லெஜண்ட்ஸ்’ அணி, தொடர்ந்து 2வது முறையாக சாம்பயன் பட்டத்தை கைப்பற்றியது. இதற்கு முன், கடந்த ஆண்டு நடந்த பைனலில் இந்திய அணி, இலங்கையை வீழ்த்தி கோப்பை வென்றிருந்தது.

மூலக்கதை