எழுச்சி பெறுவாரா ஷபாலி: இந்தியா–மலேசியா மோதல் | அக்டோபர் 02, 2022

தினமலர்  தினமலர்
எழுச்சி பெறுவாரா ஷபாலி: இந்தியா–மலேசியா மோதல் | அக்டோபர் 02, 2022

சில்ஹெட்: ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இன்று இந்தியா, மலேசியா அணிகள் மோதுகின்றன. இதில் இந்தியாவின் ஷபாலி வர்மா எழுச்சி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கதேசத்தில், பெண்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் 8வது சீசன் நடக்கிறது. இதில், 6 முறை கோப்பை வென்ற இந்தியா, ‘நடப்பு சாம்பியன்’ வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 7 அணிகள் பங்கேற்கின்றன. சில்ஹெட்டில் இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதுகின்றன.

 

இந்திய அணி, தனது முதல் போட்டியில் இலங்கையை 41 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது. இப்போட்டியில் ஏமாற்றிய ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, எழுச்சி பெறும் பட்சத்தில் நல்ல துவக்கம் கிடைக்கும். இதில் ஷபாலி வர்மாவின் ‘பார்ம்’ கவலை அளிக்கிறது. இவர், கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின், சர்வதேச ‘டி–20’ போட்டியில் ஒரு அரைசதம் கூட அடித்ததில்லை. இன்று அபார ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இலங்கைக்கு எதிராக அரைசதம் கடந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ், 33 ரன் விளாசிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மீண்டும் கைகொடுக்கலாம். பவுலிங்கில் ஹேமலதா (3 விக்கெட்), பூஜா (2), தீப்தி சர்மா (2) பலம் சேர்க்கின்றனர். ரேணுகா சிங், ஸ்னே ராணா, ராதா யாதவ் விக்கெட் வேட்டை நடத்தினால் நல்லது.

 

இலங்கை–பாக்., வெற்றி

நேற்று நடந்த லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி (61/1, 9 ஓவர்) 9 விக்கெட் வித்தியாசத்தில் மலேசியாவை (57/9, 20 ஓவர்) வீழ்த்தியது. மற்றொரு லீக் போட்டியில் இலங்கை அணி (109/9, 20 ஓவர்) ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி 11 ரன் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை (54/7, 11 ஓவர்) தோற்கடித்தது.

மூலக்கதை