சூர்யா பரவசம்... இந்தியா சாகசம்: ‘முதல்’ தொடரை வென்று அபாரம் | அக்டோபர் 02, 2022

தினமலர்  தினமலர்
சூர்யா பரவசம்... இந்தியா சாகசம்: ‘முதல்’ தொடரை வென்று அபாரம் | அக்டோபர் 02, 2022

கவுகாத்தி: இரண்டாவது ‘டி–20’ போட்டியில் சூர்யகுமார் அரைசதம் விளாச, இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சொந்த மண்ணில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக முதல் முறையாக தொடரை வென்று சாதனை படைத்தது. மில்லர் சதம் வீணானது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல்சவாலில்இந்தியாவென்றது. இரண்டாவது போட்டி அசாமின் கவுகாத்தியில் நடந்தது. தென் ஆப்ரிக்க அணியில் ஷம்சிக்கு பதில் நிகிடி இடம் பெற்றார். இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் பவுமா, ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

 

ரோகித் காயம்: இந்திய அணிக்கு ‘டாப்–ஆர்டர்’ பேட்டர்கள் மிரட்டினர். கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் அதிரடி துவக்கம் தந்தனர். இருவரும் வெளுத்து வாங்க, தென் ஆப்ரிக்க பவுலர்களை பார்க்கவே பாவமாக இருந்தது. பார்னல் வீசிய இரண்டாவது ஓவரின் 3வது பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய போது ரோகித்தின் இடது ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்ட இவர், விளாசலை தொடர்ந்தார்.

 

ராகுல் அரைசதம்: பார்னல் வீசிய போட்டியின் 4வது ஓவரில் ராகுல் வரிசையாக ஒரு சிக்சர், பவுண்டரி, ரோகித் ஒரு பவுண்டரி அடிக்க, 15 ரன்கள் கிடைத்தன. தொடர்ந்து ரபாடா, மஹாராஜ் ஓவரிலும் பவுண்டரிகள் பறந்தன.  முதல் 6 ஓவரில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 57 ரன் எடுத்தது. நார்ட்ஜே வீசிய போட்டியின் 9வது ஓவரில் ராகுல் ஒரு பவுண்டரி, சிக்சர், ரோகித் 2 பவுண்டரி அடிக்க, மொத்தம் 21 ரன்கள் எடுக்கப்பட்டன. முதல் விக்கெட்டுக்கு 59 பந்தில் 96 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித்(43) அவுட்டானார். மார்க்ரம் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ராகுல், 24 பந்துகளில் அரைசதம் எட்டினார். இவர் 57 ரன்களுக்கு மஹாராஜ் வலையில் சிக்கினார்.

 

சூர்யகுமார் ‘சூறாவளி’: பின் கோஹ்லி, சூர்யகுமார்(செல்லமாக சூர்யா) ரன் மழை பொழிந்தனர். ரபாடா வீசிய போட்டியின் 15வது ஓவரில் சூர்யகுமார் 2 சிக்சர், 2 பவுண்டரி அடிக்க, மொத்தம் 22 ரன்கள் கிடைத்தன. பார்னல் ஓவரில்(17) ஒரு சிக்சர் அடித்த சூர்யகுமார் 18 பந்தில் அரைசதம் எட்டினார். இதே ஓவரில் கோஹ்லி தன் பங்கிற்கு ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடிக்க, 23 ரன்கள் எடுக்கப்பட்டன. சூர்யகுமார்(61) ரன் அவுட்டானார். மறுபக்கம் நார்ட்ஜே ஓவரில் இரு பவுண்டரி அடித்து ‘பழைய’ கோஹ்லியாக ஜொலித்தார். தினேஷ் கார்த்திக்கிற்கு 7 பந்து தான் ‘பேட்’ செய்ய வாய்ப்பு கிடைத்தது. ரபாடா வீசிய கடைசி ஓவரில் கார்த்திக் ஒரு பவுண்டரி, 2 சிக்சர் அடித்து சிறந்த ‘பினிஷராக’ மீண்டும் நிரூபித்தார்.

 

இந்திய அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 237 ரன் குவித்தது. கோஹ்லி(49), கார்த்திக்(17) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் மஹாராஜ் அதிகபட்சம் 2 விக்கெட் வீழ்த்தினார்.

 

 

கடைசி ஓவரில் வெற்றிக்கு 37 ரன் தேவைப்பட்டன. அக்சர் படேல் பந்துவீசினார். 2, 3வது பந்துகளில் வரிசையாக சிக்சர் அடித்த மில்லர், 46 பந்துகளில் சதம் கடந்து ஆறுதல் தேடினார். கடைசி பந்தில் குயின்டன் சிக்சர் அடித்தும் இலக்கை தொட முடியவில்லை. தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 221 ரன் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. மில்லர்(106), குயின்டன்(69) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

கவுகாத்தியில் அசத்திய இந்திய அணி, சொந்த மண்ணில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக முதன்முறையாக ‘டி–20’ தொடரை கைப்பற்றியது. இதற்கு முன் 2015ல் 0–2 என தொடரை இழந்த இந்தியா, 2019ல் 1–1, 2022ல் (ஜூன்) 2–2 என தொடரை ‘டிரா’ செய்திருந்தது.

 

மிரட்டிய பாம்பு

‘பவர் பிளே’ ஓவரில் இந்திய பேட்டர்கள் அடித்து நொறுக்க, தென் ஆப்ரிக்க பவுலர்களுக்கு பாம்பு சற்று நிம்மதி அளித்தது. 7வது ஓவரின் போது கவுகாத்தி பார்சபாரா மைதானத்தில் ஒரு பாம்பு புகுந்ததால், ஆட்டம் 5 நிமிடம் பாதிக்கப்பட்டது. இதனை பணியாளர்கள் சாமர்த்தியமாக அகற்றினர்.

 

பொறுப்பாக ஆடிய விராத் கோஹ்லி, ஒட்டுமொத்த ‘டி–20’ அரங்கில் 11,000 ரன்களை எட்டிய முதல் இந்திய வீரரானார். இதுவரை 354 போட்டியில், 6 சதம், 81 அரைசதம் உட்பட 11,030 ரன் குவித்துள்ளார். அடுத்த இடத்தில் ரோகித் சர்மா (10,587 ரன், 400 போட்டி) உள்ளார்.

 

அபாரமாக ஆடிய சூர்யகுமார் யாதவ் (18 பந்து), சர்வதேச ‘டி–20’ போட்டியில் அதிவேக அரைசதம் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை லோகேஷ் ராகுலுடன் (18 பந்து, எதிர்: ஸ்காட்லாந்து, இடம்: துபாய், 2021) பகிர்ந்து கொண்டார். முதலிடத்தில் யுவராஜ் சிங் (12 பந்து, எதிர்: இங்கிலாந்து, இடம்: டர்பன், 2007) உள்ளார்.

 

1037 ரன்

நேற்று, 61 ரன் விளாசிய இந்தியாவின் சூர்யகுமார் யாதவ், சர்வதேச ‘டி–20’ அரங்கில் 1000 ரன்களை கடந்தார். இதுவரை 33 போட்டியில், ஒரு சதம், 9 அரைசதம் உட்பட 1037 ரன் எடுத்துள்ளார். தவிர இவர், குறைந்த பந்தில் (573) இம்மைல்கல்லை எட்டிய வீரரானார். இதற்கு முன், ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல், 604 பந்தில் 1000 ரன் எடுத்திருந்தார்.

 

237 ரன்

பேட்டிங்கில் அசத்திய இந்திய அணி, சர்வதேச ‘டி–20’ அரங்கில் தனது 4வது சிறந்த ஸ்கோரை (237/3) பதிவு செய்தது. ஏற்கனவே இலங்கை (260/5, 2017), வெஸ்ட் இண்டீஸ் (2016ல் 244/4, 2019ல் 240/3) அணிகளுக்கு எதிராக அதிக ரன் குவித்திருந்தது.

 

ரோகித் ‘400’

கவுகாத்தியில் களமிறங்கிய ரோகித் சர்மா, ஒட்டுமொத்த ‘டி–20’ அரங்கில் 400 போட்டிகளில் பங்கேற்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். இவர், இதுவரை 400 ‘டி–20’ போட்டியில், 6 சதம், 71 அரைசதம் உட்பட 10587 ரன் குவித்துள்ளார்.

* தவிர, இம்மைல்கல்லை எட்டிய 9வது சர்வதேச வீரரானார் ரோகித். இப்பட்டியலில் முதலிரண்டு இடங்களில் வெஸ்ட் இண்டீசின் போலார்டு (614 போட்டி), டுவைன் பிராவோ (556) உள்ளனர்.

 

178 ரன்

இந்திய அணி 237 ரன் குவித்தது. இதில் பவுண்டரி (25), சிக்சர் (13) மூலம் 178 ரன் கிடைத்தன. இது, சர்வதேச ‘டி–20’ அரங்கில், ஒரு இன்னிங்சில் பவுண்டரி, சிக்சர் மூலம் இந்தியாவுக்கு கிடைத்த 2வது அதிகபட்ச ரன் ஆனது. கடந்த 2017ல் இந்துாரில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் 260 ரன் குவித்த இந்திய அணிக்கு பவுண்டரி (21), சிக்சர் (21) மூலம் 210 ரன் கிடைத்திருந்தது அதிகபட்சமாக உள்ளது.

மூலக்கதை