கடந்த 2 ஆண்டுகளாக காது கேட்கும் திறன், பேசும் திறன் இழந்த பெண் இன்ஜினியருக்கு அறுவை சிகிச்சை: திருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் ஏற்பாடு

தினகரன்  தினகரன்
கடந்த 2 ஆண்டுகளாக காது கேட்கும் திறன், பேசும் திறன் இழந்த பெண் இன்ஜினியருக்கு அறுவை சிகிச்சை: திருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் ஏற்பாடு

திருமலை: ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி மாவட்டம் வேம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் சத்தியநாராயண ராஜு, விவசாயி. இவரது மகள் சூர்யா (29). பி.டெக் முடித்துவிட்டு ஐதராபாத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக உள்ளார். கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காரணமாக வீட்டிலிருந்து வேலை செய்து வந்தார். கடந்த 20-7-2020ம் நாளில் சம்பளம் எடுப்பதற்காக அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு மொபட்டில் சென்றார். அப்போது எதிரே வந்த மற்றொரு பைக் இவரது மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சூர்யா, காது கேட்கும் திறன் மற்றும் ேபசும் திறனை இழந்தார். இதையடுத்து விசாகப்பட்டினம் மற்றும் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு 3 முறை அறுவை சிகிச்சை செய்தும் பலனில்லை.அவருக்கு ‘காக்லியர் இம்பிளாண்ட்’ எனப்படும் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என பிரபல மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர். இதற்கு ₹10 லட்சம் செலவாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ‘ஏற்கனவே அதிகளவு செலவு செய்துவிட்டதால் தங்களிடம் பணம் இல்லை. எனவே தங்களுக்கு தேவஸ்தானம் உதவி செய்யவேண்டும்’ என்று திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான பேர்ட் மருத்துவமனைக்கு சூர்யாவின் பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து தேவஸ்தான நிர்வாகம் சார்பில் ஆந்திர முதல்வர் ெஜகன்மோகனிடம் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் முதல்வர் பொதுநிவாரண நிதியில் இருந்து ₹10 லட்சம் ஒதுக்கப்பட்டது.  கடந்த 20ம்தேதி சூர்யாவுக்கு திருப்பதி பேர்ட் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை சென்னை அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் வினய்குமார் தலைமையிலான குழுவினர் வெற்றிகரமாக செய்தனர். இதன்மூலம் ஓரிரு நாட்களில் இளம்பெண் சூர்யா காது கேட்கும் திறன் மற்றும் பேச்சுத்திறனை பெற உள்ளார். முன்னதாக மருந்து, மாத்திரைகள் மற்றும் உணவு ஏற்பாடுகளை பேர்ட் மருத்துவமனை இலவசமாக வழங்கியது.இதுகுறித்து சூர்யாவின் பெற்றோர் கூறுகையில், ‘திருப்பதி தேவஸ்தானம் மூலம் ஆந்திர அரசு எங்களுக்கு உதவி செய்துள்ளது. எங்களிடம் 1 ரூபாய் கூட பெறவில்லை. டிஸ்சார்ஜ் செய்து போக்குவரத்து ஏற்பாடு கூட தேவஸ்தானம் செய்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’ என தெரிவித்தனர். திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான பேர்ட் மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக நோயாளிகளிடம் இருந்து எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. அண்மையில் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்து அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை