தலைமுறைகள் கடந்து மக்கள் மனதில் வாழும் தமிழகத்தின் ‛சார்லி சாப்ளின்' நாகேஷ்

தினமலர்  தினமலர்
தலைமுறைகள் கடந்து மக்கள் மனதில் வாழும் தமிழகத்தின் ‛சார்லி சாப்ளின் நாகேஷ்

தமிழ் திரையுலகின் சார்லி சாப்ளின் என்றால் அனைவரும் அறிந்த ஒரே பெயர் நாகேஷ். நகைச்சுவை என்ற ஒரே வட்டத்திற்குள் பயணப்படாமல் கதாநாயகன், குணச்சித்திரம், எதிர்மறை கதாபாத்திரம் என்று தனது நடிப்பு பரிமாணத்தை பெரிதாக்கி பெரும் வெற்றி கண்ட திரைச்சிற்பி. இயக்குனர் பாலசந்தர் மற்றும் நடிகர் கமலின் விருப்ப நடிகரான நாகேஷ், 2009 ஜன., 31ல், தன், 75வது வயதில் மறைந்தார். கதாநாயகனை தேர்வு செய்யும் முன், காமெடியனை, 'புக்' செய்யும் நடைமுறை உருவாக காரணமான நடிகர் நாகேஷ் 90வது பிறந்த தினம் இன்று. அவரைப்பற்றி சற்றே திரும்பி பார்ப்போம்.

தாராபுரம் அருகே கொழிஞ்சிவாடியில் 1933ம் ஆண்டு செப்., 27ல் கிருஷ்ணன் ராவ் - ருக்மணி அம்மாள் தம்பதியரின் மகனாக பிறந்தார் செய்யூர் கிருஷ்ணா நாகேஷ்வரன் எனும் நாகேஷ். தனது பள்ளிக் கல்வியை தாராபுரத்திலும், கல்லூரிக் கல்வியை கோவை பி எஸ் ஜி கலைக் கல்லூரியிலும் பயின்றார்.

ரயில்வேயில் எழுத்தராக தனது ஆரம்ப கால பணியை மேற்கொண்டார் நடிகர் நாகேஷ். நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக பல அமெச்சூர் நாடகங்களில் நடிக்கத் துவங்கினார். மணியனின் "டாக்டர் நிர்மலா" என்ற நாடகத்தில் "தை தண்டபாணி" என்ற கதாபாத்திரத்தில் நடித்ததனால் "தை நாகேஷ்" என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். காலப்போக்கில் ஆங்கிலத்தில் இவரது பெயருக்கு முன் உள்ள தை என்ற வார்த்தையை "தாய்" என்று உச்சரிக்க "தாய் நாகேஷ்" ஆனார்.



ஒருமுறை இவரது நாடகத்தை காண சிறப்பு விருந்தினராக வந்திருந்த எம்.ஜி.ஆர் இவரது நடிப்பை வெகுவாக பாராட்ட அன்றிலிருந்து சிறு சிறு வேடங்களில் தொடர்ந்து நாடகங்களில் நடித்து வந்த இவர், இயக்குநர் முக்தா சீனிவாசன் இயக்கி 1959 ஆம் ஆண்டு வெளிவந்த "தாமரைக்குளம்" என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். தொடர்ந்து பல படங்களில் சிறு சிறு வேடமேற்று நடித்து வந்தாலும் பெரிதாக இவர் அடையாளம் காணப்படவில்லை.

பின்னர் 1962 ஆம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீதர் இயக்கி வெளிவந்த நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படத்தில் மருத்துவமனை வார்டு பாயாக இவர் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம் இவருக்கு ஒரு நல்ல திருப்பத்தை தந்தது. தொடர்ச்சியாக "பணத்தோட்டம்", "நானும் ஒரு பெண்", "பெரிய இடத்துப் பெண்", "நெஞ்சம் மறப்பதில்லை", "வேட்டைக்காரன்" என ஏராளமான படங்கள் இவரது நகைச்சுவை நடிப்பில் வெளிவர, 1964 ஆம் ஆண்டு மீண்டும் இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் "காதலிக்க நேரமில்லை" திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த "செல்லப்பா" என்ற கதாபாத்தி;ரம் இவரை நகைச்சுவை நடிப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.

தலைமுறைகள் பல கடந்தும் இன்றும் அப்படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம், வசனம், உடல்மொழி, என ஒவ்வொன்றும் ரசிகர்களால் ஆராதிக்கப் படுகின்றன. "திருவிளையாடல்" படத்தில் "தருமி", "தில்லானா மோகனாம்பாள்" திரைப்படத்தில் "சவடால் வைத்தி", "எங்க வீட்டுப் பிள்ளை" படத்தில் "கோவிந்தன்", "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தில் "அழகன்", "அன்பே வா" படத்தில் "ராமையா" என இவ்வாறு இவர் தனது உடல் மொழியால் நகைச்சுவை எனும் அருமருந்தை அள்ளித் தெளித்த படங்கள் ஏராளம், ஏராளம்.



நாகேஷ் என்ற இந்த அற்புத கலைஞனுடைய நடிப்பின் வேறொரு பரிமாணத்தை வெள்ளித்திரையில் காணச் செய்த பெருமை இயக்குநர் கே பாலசந்தருக்கு உண்டு. கே பாலசந்தரின் கதை வசனத்தில் இயக்குநர் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த "சர்வர் சுந்தரம்" திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி நடிப்பின் உச்சம் தொட்டார் நாகேஷ். தொடர்ந்து "நீர்க்குமிழி", "மேஜர் சந்திரகாந்த்", "அனுபவி ராஜா அனுபவி", "எதிர் நீச்சல்" என தனது இயக்கத்தில் நாகேஷை நாயகனாக்கி அழகு பார்த்தார் இயக்குநர் சிகரம் கே பாலசந்தர்.

நடிகர் கமல்ஹாசனின் சொந்தப்படமான "அபூர்வ சகோதரர்கள்" திரைப்படத்தில் கொடிய வில்லன் கதாபாத்திரத்தில் தனக்கே உரிய உடல் மொழி மற்றும் வித்தியாசமான வசன உச்சரிப்பால் வில்லன் கதாபாத்திரத்திலும் உச்சம் தொட்டார். எல்லாவற்றிற்கும் மேல் மகளிர் மட்டும் திரைப்படத்தில் பிணமாக நடித்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற ஒப்பற்ற கலைஞன் நடிகர் நாகேஷ்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித், சிம்பு என நான்கு தலைமுறை நடிகர்களுடனும் இணைந்து நடித்த பெருமைமிகு நடிகர். தன் மகன் நடிகர் ஆனந்த் பாபுவை நாயகனாக்கி, பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற ஒரு படத்தை, திரைக்கதை எழுதி இயக்கி இயக்குநராகவும் தன்னை காட்டிக் கொண்டார்.

எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர் தான். அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா. முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக் கொண்டது இல்லை. யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் நாகேஷ் பாணி என்கிற தனி முத்திரையைக் கொண்டு வந்தார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனுக்கு நம்மவர் படத்துக்காக மட்டும் தேசிய விருது கிடைத்தது. கலைமாமணி, வாழ்நாள் சாதனையாளர் விருது போன்ற விருதுகளை வென்றுள்ளார். தசாவதாரம் கடைசி நாள் ஷூட்டிங்குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம், என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured-டா கமல்!

தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம், ஹிந்தி என 1000 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் இந்த ஈடில்லா கலைஞனின் வீட்டில் இவர் வாங்கிய ஷீல்டுகள் எதையும் மற்றவரின் பார்வைக்கு காட்சிப் படுத்தாமல் ஒரு எளிய மனிதராக எதார்த்தமான வாழ்க்கையை வாழ்ந்து, வரும் தலைமுறை இளம் கலைஞர்களுக்கு ஒரு பாடமாக வாழ்ந்து விட்டு சென்றவர் நடிகர் நாகேஷ் என்றால் அது மிகையன்று.

மூலக்கதை