ஐசிசி டி20 தரவரிசை நம்பர் 1 இந்தியா தொடர்ந்து முன்னிலை

தினகரன்  தினகரன்
ஐசிசி டி20 தரவரிசை நம்பர் 1 இந்தியா தொடர்ந்து முன்னிலை

துபாய்: டி20 போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் வகிக்கும் இந்தியா, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த தொடரை கைப்பற்றியதன் மூலம் முன்னிலையை மேலும் அதிகரித்துக் கொண்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியுடன் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் நடந்த கடைசி டி20 போட்டியில், 187 ரன்களை துரத்திய இந்தியா 19.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு  இலக்கை எட்டி 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. கோஹ்லி 63 ரன் (48 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்), சூரியகுமார் 69 ரன் (36 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்), ஹர்திக் 25* ரன் விளாசி வெற்றிக்கு உதவினர்.சூரியகுமார் ஆட்ட நாயகன் விருதும், அக்சர் படேல் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். இந்த வெற்றியால், ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் வகிக்கும் இந்தியா, 2வது இடத்தில் உள்ள இங்கிலாந்தை விட 7 தரப்புள்ளிகள் கூடுதலாகப் பெற்று முன்னிலையை அதிகரித்துக் கொண்டுள்ளது. இந்தியா (268 புள்ளி), இங்கிலாந்து (261), தென் ஆப்ரிக்கா (258), பாகிஸ்தான் (258), நியூசிலாந்து (252) டாப் 5 இடங்களை ஆக்கிரமித்துள்ளன. ஆஸ்திரேலியா (250) 6வது இடத்தில் பின்தங்கியுள்ளது.

மூலக்கதை