3-0 என தொடரை வென்று இந்தியா அசத்தல்; ஜூலன் எப்போதும் எனக்கு வழிகாட்டியாக இருந்தார்: கேப்டன் கவுர் நெகிழ்ச்சி

தினகரன்  தினகரன்
30 என தொடரை வென்று இந்தியா அசத்தல்; ஜூலன் எப்போதும் எனக்கு வழிகாட்டியாக இருந்தார்: கேப்டன் கவுர் நெகிழ்ச்சி

லண்டன்: இந்தியா-இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையே 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த இந்தியா 45.4 ஓவரில் 169 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக தீப்தி சர்மா நாட் அவுட்டாக 68 ரன் அடித்தார். ஸ்மிருதி மந்தனா 50, பூஜா வஸ்த்ரகர் 22 ரன் எடுக்க, கடைசி போட்டியில் களம் இறங்கிய ஜூலன் கோஸ்வாமி உள்பட 5 பேர் டக்அவுட் ஆகினர். இங்கிலாந்து பவுலிங்கில் கேட் கிராஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து 43.3 ஓவரில் 153 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியா 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய பவுலிங்கில் ரேனுகா சிங் 4, கோஸ்வாமி, ராஜேஸ்வரி கெய்க்வாட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ரேனுகா சிங் ஆட்டநாயகி விருதும், இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தொடர் நாயகி விருதும் பெற்றனர். ஏற்கனவே முதல் 2 போட்டியிலும் வெற்றிபெற்றிருந்த இந்தியா இந்த வெற்றி மூலம் 3-0 என தொடரை கைப்பற்றி இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது. கடந்த 1999ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி முதல்முறையாக ஒருநாள் தொடரை இந்தியா வென்றுள்ளது.இந்த போட்டியுடன் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி(39) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவரை கவுரவிக்கும் வகையில் ‘டாஸ்’ போடும் போது கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தன்னுடன் அழைத்து சென்றார். அவர் பேட்டிங் செய்ய வரும்போதும் இங்கிலாந்து வீராங்கனைகளும், பவுலிங்கின் போது இந்திய அணியினரும் வரிசையாக நின்று கைதட்டி வரவேற்றனர். இங்கிலாந்து வீராங்கனைகள் கையெழுத்திட்ட சீருடை (பனியன்) நினைவுப்பரிசாக அளிக்கப்பட்டது.வெற்றிக்கு பின் ஹர்மன்பிரீத் கவுர் கூறியதாவது: இந்த பிட்சில் பேட்டிங் செய்வது எளிதானது அல்ல, எங்கள் பேட்டர்கள் சிறப்பாக செயல்பட்டனர். பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது. டீன் ரன் அவுட் (மன்கட்அவுட்) விளையாட்டின் ஒரு பகுதி, தீப்தி சர்மா விதிகளுக்குப் புறம்பாக எதையும் செய்யவில்லை. எங்களிடம் அவ்வளவு திறமை இருக்கிறது. இதுபோன்ற கிரிக்கெட்டைத் தொடர விரும்புகிறோம். நான் அறிமுகமானபோது, ஜூலன் கோஸ்வாமி அணியின் கேப்டனாக இருந்தார், நான் சிறப்பாக விளையாடும்போது, பலர் என்னை ஆதரித்தனர். ஆனால் எனது கடினமான காலங்களில் அவர்தான் எனக்கு ஆதரவாக இருந்தார். நான் அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர் எப்போதும் எங்களுடன் இருக்கிறார் என்பதை சொல்ல விரும்புகிறேன். அவர் எப்போதும் எனக்கு வழிகாட்டியாக இருந்தார்’’ என்றார்.பந்து பொறுக்கி போட்டது சாதிக்க தூண்டியது: கோஸ்வாமி உருக்கம்லார்ட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி ஓய்வு பெற்றார். அதிலும் இந்திய அணி கோஸ்வாமி பங்கேற்ற இறுதிப்போட்டியில் வெற்றிவாகை சூடி, பெருமையுடனும ஆனந்தக் கண்ணீருடன் அவரை அனுப்பி வைத்தது. தான் பங்கேற்ற கடைசி போட்டியிலும் கோஸ்வாமி 10 ஓவர்களில் 3 மெய்டன்கள் வீசி 2 விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார். போட்டி துவங்குவதற்கு முன் அவர் கூறுகையில், ``25 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1997ம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நியூசிலாந்து அணியுடன் நடந்த மகளிர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் எல்லைகளில் வரும் பந்துகளை பொறுக்கும் சிறுமியாக களம் இறங்கினேன். நானும் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற கனவு அன்று எனக்குத் தோன்றியது. எனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்க விரும்பி, அதற்காக நிறைய முயற்சி செய்தேன். அதன்படியே நாட்டிற்காக விளையாடியது என் வாழ்வில் மிகப்பெரிய தருணம்’’ என்றார்.

மூலக்கதை