இந்திய பெண்கள் அணிக்கு கோப்பை: இங்கிலாந்து மண்ணில் புதிய வரலாறு | செப்டம்பர் 24, 2022

தினமலர்  தினமலர்
இந்திய பெண்கள் அணிக்கு கோப்பை: இங்கிலாந்து மண்ணில் புதிய வரலாறு | செப்டம்பர் 24, 2022

லண்டன்: மூன்றாவது ஒருநாள் போட்டியில் அசத்திய இந்திய பெண்கள் அணி 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இங்கிலாந்து மண்ணில் முதன்முறையாக 3–0 என தொடரை முழுமையாக கைப்பற்றி வரலாறு படைத்தது. ஜூலன் கோஸ்வாமி, தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை வெற்றியுடன் நிறைவு செய்தார்.

இங்கிலாந்து சென்ற இந்திய பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்தியா, 2–0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் மூன்றாவது போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

 

இந்திய அணிக்கு ஷபாலி வர்மா (0), யஸ்திகா பாட்யா (0), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (4), ஹர்லீன் தியோல் (3), ஹேமலதா (2) ஏமாற்றினர். ஸ்மிருதி மந்தனா (50) அரைசதம் அடித்தார். பூஜா (22) ஆறுதல் தந்தார். நிதானமாக ஆடிய தீப்தி சர்மா, தன்பங்கிற்கு அரைசதம் விளாசினார். ஜூலன் கோஸ்வாமி, ரேணுகா சிங், ராஜேஷ்வரி கெய்க்வாட் ‘டக்–அவுட்’ ஆகினர். இந்திய அணி 45.4 ஓவரில் 169 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. தீப்தி (68) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் கேட் கிராஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

 

ரேணுகா அசத்தல்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு, இந்தியாவின் ரேணுகா சிங் தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தில்’ எம்மா லாம்ப் (21), டாமி பியூமண்ட் (8), சோபியா டங்க்லி (7) வெளியேறினர். ஜூலன் கோஸ்வாமியிடம் ஆலிஸ் கேப்சி (5) சரணடைந்தார். டேனி வியாட் (8), சோபி எக்லெஸ்டோன் (0), பிரேயா கெம்ப் (5) ஏமாற்ற, இங்கிலாந்து அணி 65 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

 

பின் இணைந்த கேப்டன் அமி ஜோன்ஸ், சார்லி டீன் ஜோடி நிதானமாக விளையாடியது. எட்டாவது விக்கெட்டுக்கு 38 ரன் சேர்த்த போது ரேணுகா பந்தில் ஜோன்ஸ் (28) சரணடைந்தார். கோஸ்வாமி பந்தில் கேட் கிராஸ் (10) போல்டானார். ஆட்டத்தின் 44வது ஓவரை வீசிய தீப்தி சர்மா, ‘மன்கேடிங்’ முறையில் சார்லி டீனை (47) ‘ரன் அவுட்’ செய்தார்.

 

இங்கிலாந்து அணி 43.3 ஓவரில் 153 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வியடைந்தது. டேவிஸ் (10) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியாவின் ரேணுகா 4, கோஸ்வாமி, ராஜேஷ்வரி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

 

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி ஓய்வு பெற்றார். நேற்று தனது கடைசி சர்வதேச போட்டியில் களமிறங்கிய இவர், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இருந்த ரசிகர்களிடம் பிரியாவிடை பெற்றார். இவரது 20 ஆண்டு (2002–2022) கால கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

 

‘டாஸ்’ கவுரவம்

மூன்றாவது போட்டிக்கான ‘டாஸ்’ போடும் நிகழ்வில் இந்தியா சார்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஜூலன் கோஸ்வாமி பங்கேற்றனர். இங்கிலாந்து கேப்டன் அமி ஜோன்ஸ் ‘காயினை’ சுண்டிவிட, தனது கடைசி சர்வதேச போட்டியில் பங்கேற்ற கோஸ்வாமியை ‘டாஸ்’ கேட்க அனுமதித்தார் ஹர்மன்பிரீத்.

 

* போட்டி துவங்குவதற்கு முன் ஜூலன் கோஸ்வாமிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. அப்போது கோஸ்வாமியை கட்டித்தழுவி கண்ணீருடன் பிரியாவிடை வழங்கினார் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர்.

 

* கோஸ்வாமி ‘பேட்’ செய்ய வந்த போது இங்கிலாந்து வீராங்கனைகள் அணிவகுத்து நின்று கவுரவித்தனர். இதேபோல ‘பீல்டிங்’ செய்ய களமிறங்கிய போது இந்திய வீராங்கனைகள் அணிவகுத்து நின்று கவுரவித்தனர்.

 

* கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதான ‘கேலரியின்’ ஒரு பகுதிக்கு ஜூலன் கோஸ்வாமியின் பெயரை சூட்ட பெங்கால் கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது.

 

255 விக்கெட்

தனது கடைசி சர்வதேச போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்திய இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி, ஒருநாள் அரங்கில் அதிக விக்கெட் சாய்த்த பவுலர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவர், 204 போட்டியில் 255 விக்கெட் சாய்த்துள்ளார். அடுத்த இடத்தில் தென் ஆப்ரிக்காவின் ஷப்னிம் (191 விக்கெட், 127 போட்டி) உள்ளார்.

 

* இவர், 12 டெஸ்ட் (44 விக்கெட்), 204 ஒருநாள் (255 விக்கெட்), 68 சர்வதேச ‘டி–20’ (56 விக்கெட்) போட்டிகளில் விளையாடி உள்ளார்.

மூலக்கதை