முடிவுக்கு வந்த ஒரு டென்னிஸ் சகாப்தம்: கண்ணீருடன் விடைபெற்றார் பெடரர்

தினகரன்  தினகரன்
முடிவுக்கு வந்த ஒரு டென்னிஸ் சகாப்தம்: கண்ணீருடன் விடைபெற்றார் பெடரர்

லண்டன்: லேவர் கோப்பை டென்னிஸ் தொடரில் கடைசி முறையாகக் களமிறங்கிய நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் கண்ணீர் மல்க ரசிகர்களிடம் இருந்து பிரியாவிடை பெற்றார். சுவிட்சர்லாந்தை சேர்ந்த பெடரர் (41 வயது) கடந்த 20 ஆண்டுகளாக டென்னிஸ் உலகின் முன்னணி வீரராக சாம்பியன் பட்டங்களை குவித்து ஆதிக்கம் செலுத்தி வந்தார். பெடரர், ஸ்பெயினின் ரபேல் நடால், செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் ஆகியோர் மூவேந்தர்களாக கொடிகட்டிப் பறந்த இந்த 20 ஆண்டுகளும் டென்னிசின் பொற்காலமாகவே கொண்டாடப்படுகிறது.இந்த காலகட்டத்தில் நடால் 22, ஜோகோவிச் 21, பெடரர் 20 என மொத்தம் 63 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று அசைக்க முடியாத மும்மூர்த்திகளாக வலம் வந்தனர். பல்வேறு காயங்கள், அவற்றில் இருந்து மீள்வதற்காக அறுவைசிகிச்சைகள் என விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பெடரரையும் விட்டுவைக்கவில்லை. 2018 ஆஸ்திரேலிய ஓபனில் ஒரு செட்டில் கூட தோற்காமல் பைனலுக்கு முன்னேறிய பெடரர், இறுதிப் போட்டியில் குரோஷியாவின் மரின் சிலிச்சை 5 செட்களில் கடுமையாகப் போராடி வென்று தனது 20வது கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 2019ல் 100வது பட்டம், 1200வது போட்டியில் வெற்றி, 12வது முறையாக விம்பிளிடன் பைனல் என்று வழக்கம்போல முத்திரைகளைப் பதித்தவர், 2020 ஆஸி. ஓபன் அரையிறுதி வரை முன்னேறினார். அதில் ஜோகோவிச்சிடம் நேர் செட்களில் தோல்வி, வலது முழங்கால் மூட்டு காயத்துக்காக அறுவைசிகிச்சை என பின்னடைவை சந்தித்தார். 2021 விம்பிள்டன் காலிறுதி வரை முன்னேறினாலும், காயங்கள் அவரை விடாது துரத்தின. இந்த நிலையில் தான், லண்டனில் நடக்கும் 2022 லேவர் கோப்பை தொடருடன் ஓய்வு பெறபோவதாக அறிவித்தார் பெடரர். இந்த தொடரில் ஐரோப்பிய அணிக்காக ரபேல் நடாலுடன் இணைந்து இரட்டையர் போட்டியில் களமிறங்கினார். பரம எதிரிகளான இருவரும் உலக அணியின் பிரான்சிஸ் டியபோ - ஜாக் சாக் (அமெரிக்கா) ஜோடியை எதிர்கொண்டனர்.மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் பெடரர் - நடால் ஜோடி 6-4, 6-7 (2-7), 9-11 என்ற செட் கணக்கில் போராடி தோற்றது. தனது கடைசி தொழில்முறை டென்னிஸ் போட்டியில் விளையாடி முடித்த பெடரர், ரசிகர்களிடம் இருந்து கண்ணீர் மல்க விடைபெற்றார். பெடரர் அழுவதைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்ட நடாலும் கண்ணீரை அடக்க முடியாமல் தேம்பி அழ ஆரம்பித்தது, இருவருக்கும் இடையேயான நட்பின் ஆழத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது. ஜோகோவிச் பெடரரை கட்டி அணைத்து ஆறுதல் கூறி தேற்ற முயன்றார். O2 அரங்கில் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களும் எழுந்து நின்று கை தட்டி மகத்தான வீரருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து பிரியாவிடை கொடுத்தனர். பெடரர் ஓய்வு பெற்ற நிலையில், நடால் மற்றும் ஜோகோவிச் எத்தனை ஆண்டுகளுக்கு தங்கள் டென்னிஸ் வாழ்க்கையை தொடர்வார்கள்? அல்கரஸ், மெட்வதேவ், அலெக்சாண்டர் ஸ்வெரவ், கேஸ்பர் ரூட், சிட்சிபாஸ் போன்ற இளம் வீரர்களின் கை இனி ஓங்குமா? போன்ற கேள்விகளுக்கு எதிர்வரும் சீசனில் விடை கிடைக்கலாம்.கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் 20போட்டி    வென்ற ஆண்டுஆஸ்திரேலிய ஓபன்    2004, 2006, 2007, 2010, 2017, 2018பிரெஞ்ச் ஓபன்    2009ல் மட்டும்விம்பிள்டன்    2003, 2004, 2005, 2006, 2007, 2009, 2012, 2017யுஎஸ் ஓபன்    2004, 2005, 2006, 2007, 2008* என்னில் ஒரு பகுதி போனது...டென்னிசில் இருந்து ரோஜர் விலகியுள்ள நிலையில், என் வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு பகுதியும் அவருடனே சேர்ந்து போவதாக உணர்கிறேன். ஏனெனில், என்னுடைய முக்கியமான தருணங்களில் எல்லாம் அவர் எனக்கு அருகில் அல்லது முன்னால் இருந்திருக்கிறார். இந்த உணர்வை வெளிப்படுத்துவது கடினம். ஆனால், இது மிகவும் அற்புதமானது. - ரபேல் நடால்* 103 ஏடிபி சாம்பியன் பட்டம்* 6 முறை ஆண்டு இறுதி ஏடிபி பைனல்ஸ் தொடரில் சாம்பியன்.* 1 டேவிஸ் கோப்பை தொடரில் பட்டம்.* 28 மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து தொடர்களில் சாம்பியன் பட்டங்கள்.* 310 வாரங்களுக்கு உலகின் நம்பர் 1 வீரராக இருந்துள்ளார்.* ரூ.1043 கோடி பரிசுத் தொகையாக வென்றுள்ளார். நடால், ஜோகோவிச்சை விட 2 மடங்கு அதிகம்

மூலக்கதை