பாபா இந்திரஜித் சதம்: தெற்கு மண்டலம் முன்னிலை | செப்டம்பர் 22, 2022

தினமலர்  தினமலர்
பாபா இந்திரஜித் சதம்: தெற்கு மண்டலம் முன்னிலை | செப்டம்பர் 22, 2022

கோவை: துலீப் டிராபி பைனலில் பாபா இந்திரஜித் சதம் விளாச, தெற்கு மண்டல அணி முன்னிலை பெற்றது.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் துலீப் டிராபி 59வது சீசன் நடக்கிறது. கோவை, ஆவாரம்பாளையம் ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடக்கும் பைனலில் மேற்கு, தெற்கு மண்டல அணிகள் விளையாடுகின்றன. முதல் நாள் முடிவில், மேற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 250/8 ரன் எடுத்திருந்தது. ஹேட் படேல் (96), உனத்கட் (39) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

கிஷோர் அசத்தல்: இரண்டாம் நாள் ஆட்டத்தில் மேற்கு மண்டல அணிக்கு, தெற்கு மண்டல வீரர் சாய் கிஷோர் தொல்லை தந்தார். இவரது ‘சுழலில்’ ஹேட் படேல் (98), சிந்தன் காஜா (10) சிக்கினர். முதல் இன்னிங்சில் மேற்கு மண்டல அணி 270 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. தெற்கு மண்டலம் சார்பில் சாய் கிஷோர் 5 விக்கெட் சாய்த்தார்.

 

இந்திரஜித் அபாரம்: பின் முதல் இன்னிங்சை துவக்கிய தெற்கு மண்டல அணிக்கு மயங்க் அகர்வால் (9) ஏமாற்றினார். ரோஹன் குன்னும்மாள் (31), கேப்டன் ஹனுமா விஹாரி (25) நிலைக்கவில்லை. மணிஷ் பாண்டே (48) ஓரளவு கைகொடுத்தார். அபாரமாக ஆடிய பாபா இந்திரஜித் (118) சதம் கடந்தார். ரிக்கி புய் (4) ஏமாற்றினார். கிருஷ்ணப்பா கவுதம் (43) நம்பிக்கை தந்தார்.

 

இரண்டாம் நாள் முடிவில் தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 318 ரன் எடுத்து, 48 ரன் முன்னிலை பெற்றிருந்தது. ரவி தேஜா (26), சாய் கிஷோர் (6) அவுட்டாகாமல் இருந்தனர். மேற்கு மண்டலம் சார்பில் உனத்கட், ஆதித் ஷேத் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

மூலக்கதை