ஐ.சி.சி., சேர்மனா கங்குலி | செப்டம்பர் 22, 2022

தினமலர்  தினமலர்
ஐ.சி.சி., சேர்மனா கங்குலி | செப்டம்பர் 22, 2022

கோல்கட்டா: ‘‘ஐ.சி.சி., சேர்மன் ஆவது எனது கையில் இல்லை,’’ என கங்குலி தெரிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சேர்மனாக ஆஸ்திரேலியாவின் கிரெக் பார்கிலே உள்ளார். இவரது பதவிக்காலம் விரைவில் முடியவுள்ளது. புதிய சேர்மன் தேர்வு செய்யப்படுவதற்கான தேர்தல் வரும் நவ., மாதம் நடக்கவுள்ளது. இதற்கான பணிகளை துவக்க ஐ.சி.சி., அனுமதி கொடுத்துள்ளது.

அடுத்த சேர்மனாக வருபவர் 2022, டிச. 1 முதல் 2024, டிச. 30 வரை என இரண்டு ஆண்டு பதவியில் இருப்பார். இந்த பதவிக்கு, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர், முன்னாள் கேப்டன் கங்குலி தேர்வு செய்யப்படும் நிலை உள்ளது.

இதுகுறித்து கங்குலி 50, கூறியது:

இந்திய அணி கடைசியாக பங்கேற்ற 4 போட்டியில் 3ல் தோற்றது. கேப்டனாக ரோகித் பங்கேற்ற 35–30 போட்டிகளில் 5 அல்லது 6ல் தான் தோல்வி கிடைத்திருக்கும். இவரது வெற்றி சதவீதம் 80 ஆக உள்ளது. மற்றபடி ஒரு சில போட்டிகளில் தோற்றதால் கவலையில்லை.

ஆனால் பெரிய தொடர்களில் சிறப்பாக செயல்படாதது ஏமாற்றம் தருகிறது. இதை சரிசெய்ய முயற்சிப்போம். ஆசிய கோப்பை தொடரில் கோஹ்லி சதம் விளாசியது மகிழ்ச்சி. இது தொடரும் என நம்புகிறேன்.

ஐ.சி.சி., சேர்மன் பதவியை பொறுத்தவரையில் எனது கைகளில் எதுவும் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

பெண்கள் ஐ.பி.எல்.,

கங்குலி கூறுகையில்,‘‘ எல்லோரும் எதிர்பார்க்கும் பெண்கள் ஐ.பி.எல்., தொடரை நடத்துவது குறித்த பணிகள் தற்போது நடக்கின்றன. 2023 மார்ச் மாதம் நடக்கும் என நம்புகிறோம். ஐ.பி.எல்., தொடரை பொறுத்தவரையில் கொரோனாவுக்கு முன் இருந்தது போல, வரும் சீசனில் உள்ளூர், வெளியூர் என மாறி மாறி போட்டிகள் நடக்கும்,’’ என்றார்.

மூலக்கதை