‘வேகமாக’ வென்றது இந்தியா * வீழ்ந்தது நியூசி., | செப்டம்பர் 22, 2022

தினமலர்  தினமலர்
‘வேகமாக’ வென்றது இந்தியா * வீழ்ந்தது நியூசி., | செப்டம்பர் 22, 2022

சென்னை: சென்னையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து ‘ஏ’ அணியை வீழ்த்தியது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து ‘ஏ’ அணி, மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. அனைத்து போட்டிகளும் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. நேற்று நடந்த முதல் போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பீல்டிங் தேர்வு செய்தார்.

ஷர்துல் மிரட்டல்

நியூசிலாந்து அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய தரப்பில் ‘வேகத்தில்’ மிரட்டிய ஷர்துல் தாகூர், குல்தீப் சென் போட்டுத் தாக்கினர். போவ்ஸ் (10), கிளீவரை (4), ஷர்துல் வெளியேற்ற, கார்ட்டர் (1), ரச்சின் ரவிந்திராவை (10), குல்தீப் சென் அவுட்டாக்கினார். கேப்டன் ராபர்ட் ஓ டன்னல், 22 ரன் எடுத்தார்.

நியூசிலாந்து அணி 74 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 9 வது விக்கெட்டுக்கு 89 ரன் சேர்த்த போது, வாக்கர் (36) வீழ்ந்தார். ரிப்பனை (61), ஷர்துல் அவுட்டாக்க, நியூசிலாந்து அணி 40.2 ஓவரில் 167 ரன்னுக்கு சுருண்டது. இந்தியாவின் ஷர்துல் தாகூர் 4, குல்தீப் சென் 3 விக்கெட் சாய்த்தனர்.

எளிய வெற்றி

இந்திய அணிக்கு பிரித்வி ஷா (17), ருதுராஜ் ஜோடி துவக்கம் கொடுத்தது. சுமாரான துவக்கம் தந்தது. ருதுராஜ் 41 ரன் எடுத்தார். திரிபாதி 31 ரன்னில் போல்டானார். சாம்சன், ரஜத் படிதர் இணைந்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர். இந்திய அணி 31.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 170 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாம்சன் (29), படிதர் (45) அவுட்டாமல் இருந்தனர்.

இந்திய அணி 1–0 என தொடரில் முன்னிலை பெற்றது.

மூலக்கதை