பும்ரா வருவாரா...மாற்றம் தருவாரா * இன்று இரண்டாவது ‘டி–20’ | செப்டம்பர் 22, 2022

தினமலர்  தினமலர்
பும்ரா வருவாரா...மாற்றம் தருவாரா * இன்று இரண்டாவது ‘டி–20’ | செப்டம்பர் 22, 2022

நாக்பூர்: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது ‘டி–20’, இன்று நாக்பூரில் நடக்கிறது. இதில் பும்ரா களமிறங்கி இந்திய அணிக்கு மாற்றத்தை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டி கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் தோற்ற இந்திய அணி 0–1 என தொடரில் பின்தங்கியுள்ளது. இரண்டாவது போட்டி இன்று நாக்பூரில் நடக்கவுள்ளது. 

பேட்டிங் நம்பிக்கை

பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஜோடி துவக்கம் தரவுள்ளது. இங்கு விளையாடிய 2 போட்டியிலும் அரைசதம் விளாசிய ராகுல் (மொத்தம் 123 ரன்), மீண்டும் ரன் மழை பொழியலாம். ‘மிடில் ஆர்டரில்’ கோஹ்லி, சூர்யகுமார், ஹர்திக் பாண்ட்யா கைகொடுக்க வேண்டும். தினேஷ் கார்த்திக்கிற்கு சரியான வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும்.

பவுலிங் ஏமாற்றம்

உலக கோப்பை தொடருக்கு முன் இன்னும் 5 போட்டிகளில் மட்டும் பங்கேற்கும் இந்திய அணி, சரியான 11 வீரர்களை கண்டறிய முடியாமல் தவிக்கிறது. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களில் இந்திய பவுலர்கள் பரிதவிக்கின்றனர். 

கடந்த 4 போட்டியில் 3ல் இந்திய அணி, கடைசி 4 ஓவரில் 41, 42, 54 ரன்களை வாரி வழங்கி தோற்றது. 19 வது ஓவரை வீசும் புவனேஷ்வர், 18 பந்தில்(பாகிஸ்தான், இலங்கை, ஆஸி.,) 49 ரன்களை கொடுத்து, ரசிகர்கள் மனங்களை புண்ணாக்கினார். 

பாண்ட்யாவும் கடைசியாக வீசிய 14 ஓவர்களில் 150 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். சுழல் வீரர் சகாலும் ஏமாற்றம் தருகிறார். அக்சர் படேல் மட்டும் ஆறுதல் தருகிறார். பும்ரா களமிறங்க உள்ளார். பீல்டிங்கில் 3 ‘கேட்ச்’ வாய்ப்புகளை நழுவவிட்ட நிலை இன்று நடக்கக் கூடாது. 

சூப்பர் துவக்கம்

ஆஸ்திரேலிய அணியில் வார்னர், மிட்சல் மார்ஷ், ஸ்டார்க், ஸ்டாய்னிஸ் என பல ‘முன்னணிகள்’ இல்லாத போதும், 211 ரன் ‘சேஸ்’ செய்து வெற்றி பெற்றது. வார்னர் இடத்தில் களமிறங்கிய கேமரான் கிரீன், 26 பந்தில் அரைசதம் விளாசி மிரட்டுகிறார். ஸ்மித், டிம் டேவிட்டும் கைகொடுக்கின்றனர். பின் வரிசையில் வந்த மாத்யூ வேட், மிரட்டலான ‘சிக்சர்கள்’ இன்று இல்லாமல் இருந்தால் இந்தியா முதல் வெற்றி பெறலாம்.

பவுலிங்கில் ஹேசல்வுட், கம்மின்ஸ், எல்லிஸ் கூட்டணியுடன், ‘சுழல்’ ஜாம்பாவும் தொல்லை தர முயற்சிப்பார்.

 

பவுலர்களுக்கு சாதகமா

நாக்பூர் ஆடுகளம் மொஹாலியை விட மந்தமாக இருக்கும் என நம்பப்படுகிறது. அணியின் வெற்றியில் பந்து வீச்சாளர்கள் பங்கு  அதிகமாக இருக்கும்.

 

13

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் 24 ‘டி–20’ போட்டியில் மோதின. இந்தியா 13, ஆஸ்திரேலியா 10ல் வென்றன. 1 போட்டி கைவிடப்பட்டது.

 

மழை வருமா

இரண்டாவது ‘டி–20’ போட்டி நடக்கும் மொஹாலி, இன்று இரவு வானம் மேகமூட்டமாக காணப்படும். மழை வர அதிகபட்சம் 15 சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளது. 

 

தயார்

இந்திய வீரர் சூர்யகுமார் கூறுகையில், ‘‘வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, சிறப்பான உடற்தகுதியுடன் உள்ளார். இரண்டாவது ‘டி–20’ போட்டிக்கு முழுத் தகுதியுடன் களமிறங்கத் தயாராக உள்ளார்,’’ என்றார்.

மூலக்கதை