பெடரர் கடைசியாக களம் காணும் லேவர் கோப்பை இன்று தொடக்கம்

தினகரன்  தினகரன்
பெடரர் கடைசியாக களம் காணும் லேவர் கோப்பை இன்று தொடக்கம்

லண்டன்: இன்று  லண்டனில் தொடங்கும் லேவர் கோப்பை டென்னிஸ்  போட்டி, நாளை மறுதினம் வரை 3நாட்கள் நடக்கும். முன்னாள் வீரர் சுவீடனைச் சேர்ந்த ஜோர்ன் போர்க்(66) தலைமையிலான ஐரோப்பிய  அணியில்  ரோஜர் பெடரர்(சுவிட்சர்லாந்து, ரேங்க் இல்லை), ரபேல் நடால்(ஸ்பெயின், 3வது ரேங்க்), நோவக் ஜோகோவிச்(ஸ்பெயின், 7வது ரேங்க்),  ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்(கிரீஸ், 6வது ரேங்க்), கஸ்பர் ரூட்(நார்வே, 2வது ரேங்க்),  ஆன்டி மர்ரே(பிரிட்டன், 43வது ரேங்க்),  மாற்று வீரராக மேட்டீயோ பெர்ட்னி(இத்தாலி, 15வது ரேங்க்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.அமெரிக்க வீரர்  ஜான் மெக்கன்ரோ(63) தலைமையிலான உலக அணியில்  பெலிக்ஸ் அகர்(கனடா, 13வது ரேங்க்), டெய்லர் ஃபிரிட்ஸ்(அமெரிக்கா, 12வது ரேங்க்), டீகோ ஸ்வார்ட்ஸ்மன்(அர்ஜென்டீனா, 17வது ரேங்க்), அலெக்ஸ் மினவூர்(ஆஸ்திரேலியா), பிரான்சிஸ் டியாஃபோ(அமெரிக்கா, 19வது ரேங்க்), ஜாக் சாக்(அமெரிக்கா, 100வது ரேங்க்), மாற்று வீரராக டம்மி பால்(அமெரிக்கா, 29வது ரேங்க்) ஆகியோர் இடம்  பிடித்துள்ளனர்.வீரர்களின் பட்டியலும், அவர்களின் தர வரிசையும் இந்த முறையும் யாருக்கு வெற்றி என்று சொல்லிவிடும். இருந்தாலும் முன்னணி வீரரும், 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான பெடரர்  ஓய்வை அறிவித்துள்ளார். அவர் விளையாடும் கடைசிப் போட்டி என்பதால் லேவர் கோப்பை இம்முறை பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ளது. *பிரபல டென்னிஸ் வீரரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ராட் லேவர்(84) பெயரில்  ‘லேவர் கோப்பை’ டென்னிஸ் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. ஐரோப்பிய அணி, உலக அணி என 2 அணிகள் மட்டும் மோதும். ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் ஐரோப்பிய  அணியிலும், உலகின் மற்ற நாடுகளைச் சேர்ந்த  முன்னணி வீரர்கள், உலக அணியிலும் இடம் பெறுவார்கள். இதுவரை நடந்த 4 போட்டிகளிலும் ஐரோப்பிய அணியே சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

மூலக்கதை