ராணுவத்துக்கு 3 லட்சம் பேரை திரட்ட உத்தரவு அதிபர் புடினை எதிர்த்து ரஷ்யாவில் போராட்டம்: முன்னாள் வீரர்கள் நாட்டை விட்டு ஓட்டம்

தினகரன்  தினகரன்
ராணுவத்துக்கு 3 லட்சம் பேரை திரட்ட உத்தரவு அதிபர் புடினை எதிர்த்து ரஷ்யாவில் போராட்டம்: முன்னாள் வீரர்கள் நாட்டை விட்டு ஓட்டம்

மாஸ்கோ: ராணுவத்துக்கு  3 லட்சம் வீரர்களை திரட்டும்படி அதிபர் புடின் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ரஷ்யாவில் போராட்டம் வெடித்துள்ளது. உக்ரைன் மீது கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், தற்போது பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. ஏற்கனவே கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் படைகளிடம் இழந்துள்ளன. தனது படைகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவுக்கு, உக்ரைனுக்கு மேற்கு நாடுகள் வழங்கும் நவீன ஆயுதங்கள்தான் காரணம் என ரஷ்ய அதிபர் புடின் கொந்தளித்துள்ளார். ‘மழுப்புகிறேன். உளறுகிறேன் என நினைக்காதீர்கள். உண்மையிலேயே அணு குண்டு போடுவேன்,’ என நேற்று முன்தினம் மேற்கு நாடுகளை அவர் எச்சரித்தார். மேலும், ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற 3 லட்சம் வீரர்களை படைக்கு திரட்டும்படியும் ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.இதனால், உக்ரைனில் பயங்கரமான போர் நடக்க வாய்ப்பு இருப்பதாக பீதி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 3 லட்சம் வீரர்களை திரட்டும்படி புடின் பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து, ரஷ்யாவில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். புடினுக்கு எதிராக நேற்று அவர்கள் கோஷமிட்டு, பேரணி நடத்தினர். இதில் ஈடுபட்ட 1500க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், நாட்டின் பல பகுதிகளுக்கு போராட்டம் பரவுகிறது. ரஷ்ய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள், தற்போது பல்வேறு வேலைகளை செய்து கொண்டு அமைதியான வாழ்க்கையை நடத்துகின்றனர். புடினின் இந்த அறிவிப்பு அவர்களுக்கு பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், ஏராளமான முன்னாள் வீரர்கள் வெளிநாடுகள் தப்பிச் செல்ல முயல்கின்றனர். இதனால், விமான நிலையங்களில் கூட்டம் அலை மோதுகிறது.*18 முதல் 65 வயதினர் வெளிநாடு செல்ல தடைமுன்னாள் ராணுவ வீரர்கள் வெளிநாடு தப்பிச் செல்வதால் அதிர்ச்சி அடைந்துள்ள ரஷ்ய அரசு, 18 வயது முதல் 65 வயதினர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்துள்ளது. மேலும், அவர்களுக்கு டிக்கெட் வழங்கக் கூடாது என்று விமான நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.*2ம் உலக போருக்கு பிறகு படை திரட்டும்  ரஷ்யாஇரண்டாம் உலகப் போர் கடந்த 1939ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரையில் நடந்தது. இதில், ஜெர்மனியின் நாஜி படைகளுக்கு எதிராக போரிடுவதற்காக, தனது நாட்டு மக்களை ராணுவத்தில் கட்டாயப்படுத்தி ரஷ்யா சேர்த்தது. தற்போது, 80 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வீரர்களை திரட்டுகிறது.*போர் கைதிகள் விடுதலைஉக்ரைனில் மரியுபோல் இரும்பு தொழிற்சாலையை பாதுகாக்க ரஷ்ய படையினருடன் போரிட்ட உக்ரைன் வீரர்கள் கைது செய்யப்பட்டனர். அதே போல், உக்ரைனை சேர்ந்த ரஷ்ய ஆதரவாளர் விக்டர் மெட்வெட்சுக் உள்பட 55 பேரை உக்ரைன் அரசு கைது செய்தது. துருக்கி மற்றும் சவுதி உதவியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உக்ரைன், ரஷ்யா பரஸ்பரம் கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டன. அதன்படி, இருநாடுகளும் கைதிகளை நேற்று விடுவித்தன. இதில், மெட்வெட்சுக் அதிபர் புடினுக்கு மிகவும் நெருக்கமானவர்.

மூலக்கதை