பத்தே நாளில் விசாரணை முடிந்தது ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
பத்தே நாளில் விசாரணை முடிந்தது ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: ஹிஜாப் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கர்நாடகா கல்வி நிலையங்களில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு கர்நாடகா அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கர்நாடகா உயர் நீதிமன்றம், அரசின் உத்தரவு செல்லும் என்று கடந்த மார்ச்சில் அறிவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, அகில இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம், இஸ்லாமிய மாணவிகள் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, துலியா அடங்கிய அரசியல் சாசன அமர்வில் இந்த விசாரணை நடத்தப்பட்டது.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் வழக்கறிஞர் செய்த வாதத்தில், ‘ஆடை அணிவது அடிப்படை உரிமை என நீங்கள் கூறுவீர்கள். ஆனால், ஆடையின்றி இருப்பதும் அடிப்படை உரிமைதான். சிலுவை, ருத்ராட்சம் போன்றவையும் மத அடையாளங்கள்தான். அவற்றை அணிந்து கொண்டு மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு வரும்போது ஹிஜாபுக்கு மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும்?’ என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘சிலுவை, ருத்ராட்சம் போன்றவை ஆடைக்கு உள்ளே மறைக்கப்படுகிறது. அவை வெளியே தெரிவதில்லை. ஆனால், ஹிஜாப் வெளியே தெரியக் கூடியதாக இருக்கிறது,’ என தெரிவித்தனர்.கர்நாடகா அரசு தரப்பு செய்த வாதத்தில், ‘குறிப்பிட்ட உடை உடுத்துவதைக் கண்டு மற்றவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படக் கூடாது என்பதே சீருடையின் நோக்கம். அந்த அடிப்படையில்தான் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதே தவிர, மதத்தின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்படவில்லை,’ என கூறப்பட்டது. ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,  ‘மதசார்பற்ற கல்வி நிலையங்களில், ஆடைகள் மத அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது. ஒருவேளை பார் கவுன்சில் திலகம் இடுவதற்கு தடை விதித்தால் நானும் அதை ஏற்பேன்,’ என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். கடந்த 5ம் தேதி தொடங்கிய இந்த விசாரணையை, 10 நாட்கள் உச்ச நீதிமன்றம் விசாரித்து முடித்துள்ளது.

மூலக்கதை