'போர் குற்றங்களுக்காக ரஷ்யா தண்டிக்கப்பட வேண்டும்': ஐநா சபை கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு.. சேதங்களுக்கு இழப்பீடு பெற்று தர கோரிக்கை..!!

தினகரன்  தினகரன்
போர் குற்றங்களுக்காக ரஷ்யா தண்டிக்கப்பட வேண்டும்: ஐநா சபை கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு.. சேதங்களுக்கு இழப்பீடு பெற்று தர கோரிக்கை..!!

ஜெனிவா: உக்ரைனில் போர் குற்றங்களில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ஐநா தலைவர்களை அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியிருக்கிறார். ஐநா பொதுச்சபை உலக தலைவர்களின் வருடாந்திர கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மத்தியில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது பேசிய ஜெலன்ஸ்கி, உக்ரைனுக்கு எதிராக குற்றம் இழைக்கப்பட்டுள்ளது, நாங்கள் நியாயமான தண்டனையை தான் கோருகிறோம். எங்கள் மாநில எல்லைகளில் குற்றங்கள் நடைபெற்றுள்ளன. எங்கள் நாட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கும், பெண்கள், குழந்தைகளை கொலை செய்த குற்றங்களுக்காகவும், ரஷ்யாவிற்கு ஐநா சபை தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ரஷ்யாவின் போர் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். போர் குற்றங்களுக்கு ரஷ்யாவுக்கு தண்டனை விதிக்கப்படுவது பிற நாடுகளை ஆக்கிரமிக்க நினைக்கும் நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்று உக்ரைன் அதிபர் தெரிவித்தார். போரினால் உக்ரைன் சந்தித்துள்ள இழப்புகளுக்கு ரஷ்யாவிடம் இருந்து இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார்.

மூலக்கதை