நடிகர் போண்டா மணி சிகிச்சைக்கு அரசு உதவி : மா.சுப்பிரமணியன் உறுதி

தினமலர்  தினமலர்
நடிகர் போண்டா மணி சிகிச்சைக்கு அரசு உதவி : மா.சுப்பிரமணியன் உறுதி

இலங்கையில் இருந்து அகதியாக வந்தவர் கேதீஸ்வரன் என்ற போண்டா மணி. சென்னையில் சினிமா வாய்ப்பு தேடியபோது கே.பாக்யராஜ் இயக்கிய பவுனு பவுனுதான் படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார். “கேதீஸ்வரன் என்கிற பெயர் சினிமாவுக்கு சரியாக வராது. நான் கவுண்டமணி நீ போண்டா மணி” என்று பெயரை மாற்றினார் கவுண்டமணி. போண்டாவை விரும்பி சாப்பிடுவதால் இப்படி ஒரு பெயரை வைத்தார். பின்னர் வடிவேலு குழுவில் இணைந்த போண்டாமணி இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

போண்டாமணிக்கு மாதவி என்ற மனைவி இருக்கிறார். இவர் மாற்றுத்திறனாளி. சாய்குமாரி என்ற மகளும், சாய் ராம் என்ற மகனும் இருக்கிறார்கள். இவர்கள் முறையே 12 மற்றும் 10ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.



தற்போது போண்டாமணி இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நெருக்கமான சில நடிகர்கள் அவருக்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு மருத்துவமனையில் பதிவு செய்து மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அவர் காத்திருக்க வேண்டும், அல்லது தனியார் மருத்துவமனையில் 15 லட்சம் வரை செலவு செய்து மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். அதுவரை அவர் டயாலிசிஸ் செய்து கொண்டிருக்க வேண்டும். இதுதான் இப்போது அவரது உடல் நிலை.

இந்நிலையில் போண்டமணி கூறுகையில், “ஒரு படத்திற்காக நிஜ சாக்கடையில் இறங்கி நடித்ததால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. சமீபத்தில் தான் சிறுநீரகங்கள் செயலிழந்த விஷயம் தெரிந்தது. எல்லோரையும் சிரிக்க வைச்சேன். இறுதியாக, என் வாழ்க்கையில் இப்படி ஒரு துயரம் ஏற்பட்டதை தாங்கிக்க முடியல. நான் வறுமையில் வாடி வருகிறேன். எல்லாரையும் நகைச்சுவை மூலம் சிரிக்க வைத்த நான், மிகவும் வேதனையான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறேன். அனைத்து மக்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வரும் முதல் அமைச்சர் எனக்கும் உதவ வேண்டும்” என்று கண்ணீர் மல்க கூறியிருந்தார்.



இதனிடையே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போண்டா மணியை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சந்தித்து பேசினார். அவருக்கு வேண்டிய உதவிகள் செய்து தரப்படும் என கூறியிருக்கிறார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ‛‛போண்டா மணிக்கு சீறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது டயாலிசிஸ் செய்யும் சூழல் உருவாகி உள்ளது. சீறுநீரக மாற்று சிகிச்சை செய்யும் நிலையை எட்டி வருகிறது. அவரது உறவினர்கள் யாராவது சிறுநீரகம் தானம் செய்வார்களா என்று விசாரிக்க சொல்லி உள்ளோம். கிடைக்காத பட்சத்தில் அரசு விதிகளின் படி அவருக்கு சிறுநீரகம் மாற்று சிகிச்சை தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்கான செலவு முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் செய்யப்படும். அவருக்கு வேண்டிய சிகிச்சை அரசு சார்பில் செய்யப்படும்'' என்றார் மா.சுப்ரமணியன்.

மூலக்கதை