உலக வரைபடத்தில் இருந்து உக்ரைனை நீக்கி விட ரஷ்யா முயற்சி: ஐநா பொதுச்சபையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
உலக வரைபடத்தில் இருந்து உக்ரைனை நீக்கி விட ரஷ்யா முயற்சி: ஐநா பொதுச்சபையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றச்சாட்டு

வாஷிங்டன்: உலக வரைபடத்தில் இருந்து இறையாண்மை நாடான உக்ரைனை நீக்கி விட ரஷ்யா முயற்சி எடுப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம் சாட்டியுள்ளார். ஐ.நா. பொதுச்சபையின் 77வது கூட்டத்தில் பேசிய அவர், அண்டை நாட்டினர் மீது ரஷ்யா போர் தொடுத்தது வெட்ககேடான செயல் என்று விமர்சித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சாசனத்தின் முக்கிய கொள்கைகளை ரஷ்யா மீறியதாக பைடன் குற்றம்சாட்டினார். உக்ரைனை கைப்பற்ற ராணுவத்தில் பழைய வீரர்களை சேர்க்க ரஷ்யா அழைப்பு விடுப்பதாக பைடன் குற்றம்சாட்டினார். ரஷ்யாவின் அத்துமீறலை உலக நாடுகள் கவனிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதனிடையே ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் சில பிராந்தியங்களை பொது வாக்கெடுப்பு நடத்தி அவற்றை ரஷ்யாவுடன் இணைப்பதற்காக நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. அதன்படி ராணுவ நடவடிக்கைகளில் அனுபவம் கொண்ட முன்னாள் வீரர்களுக்கு புதின் அழைப்பு விடுத்துள்ளார். சுமார் 3 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியுள்ளார். உக்ரைன் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகளுக்கு அணு ஆயுத எச்சரிக்கையை அதிபர் புதின் விடுத்திருப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை