ஹர்மன்பிரீத் கவுர் அசத்தல் சதம்: இந்திய பெண்கள் ரன் குவிப்பு | செப்டம்பர் 21, 2022

தினமலர்  தினமலர்
ஹர்மன்பிரீத் கவுர் அசத்தல் சதம்: இந்திய பெண்கள் ரன் குவிப்பு | செப்டம்பர் 21, 2022

கேன்டர்பரி: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சதம் விளாச, இந்திய அணி 50 ஓவரில் 333 ரன் குவித்தது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இந்தியா 1–0 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது போட்டி கேன்டர்பரியில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

 

மந்தனா நம்பிக்கை: இந்திய அணிக்கு ஷபாலி வர்மா (8) ஏமாற்றினார். பின் இணைந்த ஸ்மிருதி மந்தனா, யஸ்திகா ஜோடி ஓரளவு கைகொடுத்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்த போது சார்லி டீன் பந்தில் யஸ்திகா (26) அவுட்டானார். சோபி எக்லெஸ்டோன் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட மந்தனா (40) நம்பிக்கை தந்தார்.

 

ஹர்மன்பிரீத் அபாரம்: பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஹர்லீன் தியோல் ஜோடி இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்தது. ஹர்லீன், ஒருநாள் போட்டியில் தனது முதல் அரைசதம் அடித்தார். நான்காவது விக்கெட்டுக்கு 113 ரன் சேர்த்த போது, ஹர்லீன் (58) ஆட்டமிழந்தார். பூஜா (18) நிலைக்கவில்லை.

 

அபாரமாக ஆடிய ஹர்மன்பிரீத், ஒருநாள் போட்டி அரங்கில் தனது 5வது சதத்தை பதிவு செய்தார். எக்லெஸ்டோன் வீசிய 49வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த ஹர்மன்பிரீத், கெம்ப் வீசிய கடைசி ஓவரில் ஒரு சிக்சர், ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விளாசினார். இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 333 ரன் எடுத்தது. ஹர்மன்பிரீத் (143), தீப்தி சர்மா (15) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

ஸ்மிருதி மந்தனா, ஒருநாள் போட்டி அரங்கில் 3000 ரன்னை எட்டிய மூன்றாவது இந்திய வீராங்கனையானார். இதுவரை 76 போட்டியில், 5 சதம், 24 அரைசதம் உட்பட 3023 ரன் எடுத்துள்ளார். ஏற்கனவே மிதாலி ராஜ் (7805 ரன், 232 போட்டி), ஹர்மன்பிரீத் கவுர் (3318 ரன், 123 போட்டி) இம்மைல்கல்லை அடைந்தனர்.

* ஒருநாள் போட்டி வரலாற்றில், 3000 ரன்னை குறைந்த இன்னிங்சில் அடைந்த இந்திய வீராங்கனையானார் மந்தனா (76 இன்னிங்ஸ்). இதற்கு முன், மிதாலி ராஜ் 88 இன்னிங்சில் இம்மைல்கல்லை எட்டியிருந்தார். தவிர, 3000 ரன்னை அதிவேகமாக எட்டிய சர்வதேச வீராங்கனைகள் வரிசையில் 3வது இடம் பிடித்தார் மந்தனா. முதலிரண்டு இடங்களில் ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் (62 இன்னிங்ஸ்), மேக் லானிங் (64 இன்னிங்ஸ்) உள்ளனர்.

 

இரண்டாவது போட்டியில் 333 ரன் எடுத்த இந்திய பெண்கள் அணி, ஒருநாள் போட்டி அரங்கில் இங்கிலாந்துக்கு எதிராக தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன், 2017ல் (டெர்பி) 281/3 ரன் எடுத்திருந்தது.

* தவிர இது, ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர். கடந்த 2017ல் அயர்லாந்துக்கு எதிராக 358/2 ரன் குவித்தது முதலிடத்தில் உள்ளது.

* இந்திய அணி இதுவரை 4 முறை (358, 333, 317, 302), ஒரு இன்னிங்சில் 300 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது.

 

பேட்டிங்கில் அசத்திய இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஒருநாள் போட்டி அரங்கில் தனது 2வது சிறந்த ஸ்கோரை பெற்றார். கடந்த 2017ல் டெர்பியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 171 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தது இவரது சிறந்த ஸ்கோராக உள்ளது.

மூலக்கதை