கைவிடும் கடைசி கட்ட பவுலிங் * தொடரும் இந்திய அணியின் சோகம் | செப்டம்பர் 21, 2022

தினமலர்  தினமலர்
கைவிடும் கடைசி கட்ட பவுலிங் * தொடரும் இந்திய அணியின் சோகம் | செப்டம்பர் 21, 2022

நாக்பூர்: கடைசி கட்ட பந்துவீச்சில் பவுலர்கள் சொதப்புவதால், இந்திய அணியை தோல்வி துரத்துகிறது. உலக கோப்பை தொடர் வரவுள்ள நிலையில் இது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ‘டி–20’ அணி கேப்டனாக ரோகித் சர்மா, பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்ற பின், பேட்டிங் சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ளது. மறுபக்கம் அணியின் பவுலிங் சறுக்கியுள்ளது. பாகிஸ்தான் (181/7), இலங்கை (173/8), ஆஸ்திரேலியா (208/6) அணிகளுக்கு எதிரான போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.

ஆனால் மோசமான பந்து வீச்சு காரணமாக கடைசி 4 ஓவர்களில் 41, 42, 54 ரன்களை வாரி வழங்கி தோற்றது. இந்த 3 போட்டிகளிலும் பும்ரா இல்லாத நிலையில் 19 வது ஓவரை வீசிய புவனேஷ்வர், 16, 14, 19 ரன்களை விட்டுத்தந்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, 4 ஓவரில் 52 ரன் கொடுத்து, சர்வதேச ‘டி–20’ ல் தனது மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார்.

காயத்தில் இருந்து மீண்டு வந்த ஹர்ஷல் படேல் வீசிய 4 ஓவரில் 49 ரன் கொடுத்தார். இவர் வீசிய 18 வது ஓவரில் 22 ரன் எடுக்கப்பட்டன. முதல் ‘டி–20’ல் 24 பந்தில் 55 ரன் எடுக்க வேண்டிய ஆஸ்திரேலியா, 4 பந்துகள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்றது. 

இதுபோன்ற சூழலில் பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்தி அணியை வெற்றி பெற வைக்கும் பவுலர்கள் இந்திய அணியில் இல்லை என்பது சரியான நேரத்தில் தெரியவந்துள்ளது. உலக கோப்பை தொடர் துவங்க ஒரு மாதம் மட்டும் உள்ள நிலையில் இது ஏமாற்றத்தை தருகிறது.

சறுக்கிய பீல்டிங்

பவுலிங் மட்டுமன்றி பீல்டிங்கும் மோசமாக உள்ளது. கிரீன், ஸ்மித், வேட் கொடுத்த ‘கேட்ச்’ வாய்ப்புகளை இந்திய பீல்டர்கள் நழுவவிட்டனர். இந்திய அணி முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியது:

பொதுவாக சிறந்த இந்திய அணியில் ‘சீனியர்’, ‘ஜூனியர்’ வீரர்கள் கலந்து இருப்பர். தற்போது இளம் வீரர்கள் அணியில் இல்லாததால், பீல்டிங் சொதப்புகிறது. கடந்த 5–6 ஆண்டுகளில் இந்திய அணியின் பீல்டிங் மற்ற எந்த அணிகளுடன் பொருந்தாத வகையில் தான் உள்ளது. உலக கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

18 பந்து, 49 ரன்

இந்திய கிரிக்கெட் ‘ஜாம்பவான்’ கவாஸ்கர் கூறுகையில்,‘‘ மைதானத்தில் பனிப்பொழிவு அதிகம் இருந்ததாக தெரியவில்லை. சரியாக பந்துவீசவில்லை என்பது தான் உண்மை. புவனேஷ்வர் ஒவ்வொரு முறையும் எதிர்பார்க்கும் போதெல்லாம் ரன்களை வாரி வழங்குகிறார். மூன்று போட்டியில் வீசிய 19வது ஓவரின் 18 பந்தில் 49 ரன் (சராசரி ஒரு பந்துக்கு 3 ரன்) விட்டுக் கொடுத்துள்ளார். அனுபவ வீரர் என்றாலும் 35 ரன்வரை தந்திருக்கலாம். இவரது பந்து வீச்சு இந்திய அணிக்கு கவலையாக அமைந்துள்ளது,’’ என்றார்.

 

கார்த்திக் மீது ரோகித் கோபம்

முதல் ‘டி–20’ போட்டியில் சகால் வீசிய பந்து கிரீன் கால் ‘பேடில்’ பட்டது. சகால், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், அப்பீல் கேட்காமல் விட்டனர். ‘ரீப்ளேயில்’ பந்து ஸ்டம்சை தகர்ப்பது தெரியவர, இந்திய அணி கேப்டன் ரோகித் கோபம் அடைந்தார்.

அடுத்து உமேஷ் வீசிய பந்து மேக்ஸ்வெல் பேட்டில் பட்டுச் சென்றது. இதைப் பிடித்த தினேஷ் கார்த்திக், மீண்டும் அப்பீல் செய்யவில்லை. ரோகித் ‘டி.ஆர்.எஸ்.,’ கேட்க, ‘ரீப்ளேயில்’ மேக்ஸ்வெல் அவுட்டானது தெரிந்தது. உடனே கார்த்திக் பக்கம் திரும்பிய ரோகித், கோபத்துடன் அவரது கழுத்தை நெறிப்பது போல செய்தார். 

கார்த்திக் கூறுகையில்,‘ டி.ஆர்.எஸ்., விஷயத்தில் உதவி செய்யாததால் அப்படிச் செய்தார். மற்றபடி நாங்கள் நல்ல நண்பர்கள். ஜாலியாக சிரித்துக் கொண்டு தான் இருந்தார்,’’ என்றார்.

மூலக்கதை