இந்தியா-இங்கிலாந்து 4வது டெஸ்ட் ஓவலில் நாளை தொடக்கம்: அஸ்வினுக்கு இடம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியாஇங்கிலாந்து 4வது டெஸ்ட் ஓவலில் நாளை தொடக்கம்: அஸ்வினுக்கு இடம்

ஓவல்: இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், லார்ட்ஸ்சில் 2வது டெஸ்ட்டில் இந்தியா 151 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லீட்சில் நடந்த 3வது டெஸ்ட்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 76 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் 1-1 என தொடர் சமனில் இருக்க 4வது டெஸ்ட் ஓவலில் நாளை தொடங்குகிறது.

3வது டெஸ்ட்டில் இந்தியா படுதோல்வியால் அணி தேர்வு மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் அணியில் நாளை கண்டிப்பாக மாற்றம் இருக்கும்.

ஜடேஜாவுக்கு பதிலாக விகாரி, இசாந்த் சர்மாவுக்கு பதிலாக அஸ்வின் இடம் பெறலாம். ரகானேவும் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவருக்கு கல்தா கொடுத்து சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பேட்டிங்கில் ரோகித்சர்மா (230ரன்), கே. எல். ராகுல்(252ரன்) மட்டுமே பார்மில் உள்ளனர். கோஹ்லி சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்து 2 ஆண்டு ஆகி விடடது.

ரிஷப் பன்ட்டும் ரன் எடுக்க வேண்டிய நெருக்கடி உள்ளது. பந்துவீச்சில் பும்ரா 14, சிராஜ் 13, ஷமி 11 விக்கெட் எடுத்துள்ளனர்.

இதனால் இந்தியா 3 வேகம், ஒரு சுழல் என களம் இறங்கும் என தெரிகிறது.

மறுபுறம் இங்கிலாந்து 3வது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற உற்சாகத்தில் உள்ளது. டேவிட் மலன் வருகை பேட்ங்கில் வலுசேர்த்துள்ளது.

ஜோ ரூட் ஒவ்வொரு டெஸ்ட்டிலும் சதம் அடித்து வருகிறார். இந்திய பந்து வீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் அவர் இந்த தொடரில், 507 ரன் குவித்துள்ளார்.

பந்துவீச்சில் ராபின்சன் 16, ஆண்டர்சன் 13 விக்கெட் வீழ்த்தி உள்ளனர். காயத்தில் இருந்து மார்க் வுட் மீண்டுள்ள நிலையில், ஆல்ரவுண்டர் கிறிஸ்வோக்ஸ் வருகை மேலும் வலு சேர்க்கிறது.

இரு அணிகளும் தொடரில் முன்னிலை பெற போராடும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி நாளை மாலை 3. 30 மணிக்கு இப்போட்டி துவங்கவுள்ளது.

130வது முறையாக மோதல். . .
இரு அணிகளும் இதுவரை 129 டெஸ்ட்டில் நேருக்கு நேர் மோதி உள்ளன.

இதில் இந்தியா 30, இங்கிலாந்து 49 போட்டிகளில் வென்றுள்ளன 50 டெஸ்ட் டிராவில் முடிந்துள்ளது. நாளை 130வது போட்டியில் மோத உள்ளன.

''50 ஆண்டுக்கு பின் ஓவலில் வெல்லுமா?''
ஓவல் மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்துக்கு எதிராக 13 டெஸ்ட்டில் ஆடி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.

5ல் தோல்வி கண்டுள்ளது. 7 போட்டி டிராவில் முடிந்துள்ளது.

1971ம் ஆண்டு அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் ஆடிய 8 போட்டிகளில் 5 டிரா, 3 தோல்வி சந்தித்துள்ளது.

அதுவும் கடைசி 3 டெஸ்ட்டிலும் தோல்வி அடைந்துள்ளது. கடந்த முறை (2018ம் ஆண்டு) கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 118 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

50 ஆண்டுகளுக்கு பின் இங்கு இந்தியா வெற்றிபெறுமா என்ற ஏக்கம் உள்ளது. ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து இங்கு 102 போட்டிகளில் ஆடி 43ல் வெற்றி, 22ல் தோல்வி கண்டுள்ளது.

37 டிராவில் முடிந்துள்ளது.

''அஸ்வினை எதிர்கொள்ள தயார்''
இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் நேற்று அளித்த பேட்டி: கோஹ்லி உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. இப்போது அவரை அவுட் ஆக்கும் வழிமுறையை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

அடுத்து வரும் போட்டிகளிலும் அவருக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுப்போம். அஸ்வின் பந்துவீச்சை எதிர்கொள்ளவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.



''பிட்ச் ரிப்போர்ட்''
ஓவல் மைதானம் சுழலுக்குச் சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இங்கு டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

3 மற்றும் 4வது நாளில் பந்து துல்லியமாக திரும்பும். இங்கு கடைசியாக நடந்த 5 டெஸ்ட்டில் முதன் இன்னிங்ஸ் சராசரி ரன் 357, 2வது இன்னிங்ஸ் சராசரி 276, 3வது இன்னிங்ஸ் 320, 4வது இன்னிங்ஸ் 286 ரன்.

ஓவலில் அடுத்த 3நாட்கள் மழைக்கு வாய்ப்பு இல்லை.

ஆனால் 4 மற்றும் 5வது நாளில் மழை குறுக்கீடு இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை