டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இன்று ஒரே நாளில் 4 பதக்கம்; துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்: வட்டு, ஈட்டி எறிதலில் 2 வெள்ளி, ஒரு வெண்கலம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இன்று ஒரே நாளில் 4 பதக்கம்; துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்: வட்டு, ஈட்டி எறிதலில் 2 வெள்ளி, ஒரு வெண்கலம்

டோக்கியோ: டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இன்று ஒரே நாளில் 4 பதக்கம் வென்று சாதனை படைத்தது. துப்பாக்கி சுடுதல் போட்டியில் அவானி லெகாரா தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

வட்டு எறிதலில் யோகேஷ்கத் துனியா வெள்ளியும், ஈட்டி எறிதலில் தேவேந்திரா வெள்ளியும், சுந்தர்சிங் வெண்கலமும் வென்று சாதனை படைத்தனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாரா ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில், 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள், தடகளம், வில்வித்தை, பேட்மிட்டன், டேபிள்டென்னிஸ் உள்ளிட்ட 9 வகையான விளையாட்டுகளில் கலந்துகொண்டுள்ளனர். இதில், டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் பவீனா படேல் வீல்சேரில் அமர்ந்த நிலையில், இறுதி போட்டியில் சீனாவின் யிங் ஜூவுடன் மோதினார். முடிவில் 3-0 என யிங் ஜூ வெற்றி பெற்று  தங்கப்பதக்கம் வென்றார்.

பவினா பட்டேலுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் பதக்கமாக அது அமைந்தது.

நேற்று நடந்த ஆண்கள் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் நிஷத்குமார், 2. 06 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார். இப்போட்டியில் அமெரிக்க வீரர் ரோடெரிக் டவுன்செண்ட் தங்கமும், வைஸ் டல்லாஸ் வெண்கலமும் பெற்றனர்.

வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் வினோத்குமார், 19. 91 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலம் வென்றார்.

இது ஆசிய சாதனையாகும்.

இன்று காலை வரை பதக்கப்பட்டியலில் 2 வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் இந்தியா 3 பதக்கங்களை பெற்றிருந்தது. டோக்கியோவில் இன்றைய நாள், இந்தியாவிற்கு உற்சாகத்தை அளித்தது.

இன்று காலை இந்தியா பங்கேற்ற முதல் போட்டியான துப்பாக்கி சுடுதல் மகளிர் 10 மீட்டர் ரைபிள் பிரிவில் வீராங்கனை அவானி லெகாரா பங்கேற்றார். அவர் 249. 6 புள்ளிகள் பெற்று முந்தைய உலக சாதனையை சமன் செய்து, முதலிடம் பிடித்து தங்கம் வென்று அசத்தினார்.

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண்மணி என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார் அவானி லெகாரா. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த அவானி லெகாராவுக்கு வயது 19 தான் ஆகிறது.

இவர் இந்த ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கம் வென்ற இந்திய வீராங்கனையானார்.

அடுத்தடுத்து பதக்கம்: எப்56 பிரிவு வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் யோகேஷ் கத்துனியா வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். டெல்லியை சேர்ந்த 24 வயதுடைய யோகேஷ், 44. 38 மீட்டர் தூரம் வட்டு எறிந்து வெள்ளிப்பதக்கத்தை முத்தமிட்டார்.

இதேபோல், ஈட்டி எறிதலில் கிளாஸ் எப்45 பிரிவில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா வெள்ளிப்பதக்கமும், சுந்தர்சிங் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினர். ஒரே போட்டியில் 2 பதக்கம் பெற்று இந்தியா சாதனை படைத்தது.

தேவேந்திர ஜஜாரியா 64. 35 மீட்டர் தூரம் எறிந்து 2ம் இடத்தையும், சுந்தர்சிங் 62. 58 மீட்டர் தூரம் எறிந்து 3ம் இடத்தையும் பிடித்தனர். இப்போட்டியில் இலங்கை வீரர் தினேஷ் பிரியன் ஹராத் 67. 79 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை பெற்றார்.

இன்று ஒரேநாளில் இந்தியாவிற்கு ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கம் கிடைத்துள்ளது.

இதுவரை ஒரு தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. இதற்கு முன் இந்தியா பாரா ஒலிம்பிக்கில் அதிகபட்சமாக 4 பதக்கமே வென்றிருந்தது.

அச்சாதனையை தற்போது முறியறித்து 7 பதக்கங்களை வென்றுள்ளது. இன்னும் பதக்கம் வெல்லும் வீரர்களாக சேலத்தை சேர்ந்த தங்க மாரியப்பன் உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர்.

பதக்க வேட்டையை நடத்தி வரும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கயா நாயுடு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை